என்னுடைய இந்த புதிய படத்துக்கு இளையராஜா தான் வசனம் எழுதப் போகிறார் என்றார் டைரக்டர் மகேந்திரன்.
முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள் என தமிழ்சினிமா ரசிகர்களை இன்றைக்கும் திரும்பி பார்க்க வைத்தவர் டைரக்டர் மகேந்திரன். அவரும், இளையராஜாவும் இணைந்த எல்லாப் படங்களுமே தனித்துவம் பெற்றவை.
அப்படிப்பட்ட இந்த இரண்டு பிரபலங்களும் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள். அந்தப் படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.
நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவும் டைரக்டர் மகேந்திரனும் பங்கேற்றனர். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப்படத்தைப் பற்றி டைரக்டர் மகேந்திரன் பேசியதாவது,
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் பண்ணுகிறேன். புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்திதான் இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.
இந்த இடைப்பட்ட நாட்களில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கே உரிய சில கிறுக்குத்தனங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. நீங்கள் எல்லாம் அறிந்த கதை தான்.
இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் டைட்டில் வைத்தார். உதிரிப் பூக்கள் என்ற டைட்டிலையே அவர்தான் வைத்தார். அதேபோல இந்தப்படத்துக்கும் அவர்தான் டைட்டில் வைப்பார்.
என் படங்களில் பெரும்பாலான வசனங்களை நான் எழுதவில்லை. இளையராஜாதான் எழுதியிருப்பார். நான் இப்படிச் சொன்னதும் உங்களுக்கு குழப்பமாக இருக்கும்.
அது வேறொன்றுமில்லை, நான் எடுத்த பெரும்பாலான காட்சிகள் மெளனமாகத்தான் இருக்கும். அந்த காட்சிகளுக்கெல்லாம் தன் பின்னணி இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அதனால் தான் அப்படிச் சொன்னேன். அவர் இல்லாமல் என் படங்கள் எப்போதுமே இல்லை,” என்றார் மகேந்திரன்.
0 comments:
Post a Comment