Friday 28 February 2014

Leave a Comment

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்புக்கு மைல் கல்லாக அமைந்த படம்..!



“மூன்று முடிச்சு” குப் பின் பால சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘அவர்கள்’. பலரும் முக்கோணக் காதல் கதையை படமாக எடுப்பார்கள். அதிலிருந்து மாறுபட்டு, நான்கு கோணங்களில் காதலை படம் பிடித்துக் காட்டினார் பால சந்தர். திரைக்கதையை மிகத் திறமையாக அமைத்தார்.

கதையின் நாயகி சுஜாதா, இசைக்கலைஞன் ரவிக்குமாரை (புதுமுகம்) காதலிக்கிறார். அவர் எழுதும் கடிதங்கள் ரவிக்குமாருக்கு போய்ச் சேராததால், ரஜினிகாந்துக்கு கழுத்தை நீட்டுகிறார். ரஜனிகாந்த், ராமநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மனைவியை துன்புறுத்தி மகிழும் ‘சாடிஸ்ட்’ அவர்.

மனைவியை கட்டித் தழுவும் போது கூட, இந்த மாதிரி அணைத்தால் உனக்குப் பிடிக்குமா? உன் பழைய காதலன் உன்னை எப்படி அணைப்பான்? என்று. வார்த்தைகளால் தேள் போல கொட்டுவார்.

இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. குழந்தையுடன் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார் சுஜாதா.
அங்கு கமலஹாசன் (கதாபாத்திரத்தின் பெயர் ஜானி) வேலை பார்க்கிறார். மனைவியை இழந்தவர். எல்லோருக்கும் உதவி செய்யும் நல்லவர். அவருக்கு தோழனாக இருப்பது ‘ஜுனியர்’ என்ற பெயருள்ள பேசும் பொம்மை.

அவர், சுஜாதாவுக்கு உதவிகள் செய்கிறார். கமல் வீட்டிலேயே குடியேறுகிறார், சுஜாதா.
சுஜாதாவின் கதையை அறியும் கமல், அவரை மனதுக்குள் நேசிக்கிறார். ஆனால், அது ஒரு தலைக்காதல்.

இந்த சமயத்தில், சுஜாதாவின் பழைய காதலன் ரவிக்குமார் பக்கத்து வீட்டில் வசிப்பது சுஜாதாவுக்குத் தெரிகிறது. இருவரும் சந்தித்துப் பேசும் போது, ரவிக்குமார் நிரபராதி என்பது சுஜாவுக்குத் தெரிகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இந்த சமயத்தில் சுஜாதா வேலை பார்க்கும் கம்பனியின் மனேஜராக மாற்றல் ஆகிவருகிறார் ரஜினி. தான் திருந்திவிட்டதாக கூறி, சுஜாதாவுக்கு பல உதவிகள் செய்கிறார்.

இதனால் சுஜாதாவின் மனம் மாறுகிறது. கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று வேறு பெண்ணை மணக்கிறார், ரவிக்குமார்.

இந்த கல்யாணம் முடிந்து சுஜாதா வீடுதிரும்பும் வேளையில் ஒரு வட இந்தியப் பெண் கைக்குழந்தையுடன் வந்து, தன்னை ராமநாதனின் (ரஜினி) மனைவி என்று கூறுகிறாள்.

இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால், ரஜினி மாறவே இல்லை என்பதை சுஜாதா தெரிந்து கொள்கிறார். ஏன் இப்படி செய்தீர்கள்? என்று சுஜாதா கேட்க நீ மறுமணம் செய்வதை தடுக்கவே அப்படிச் செய்தேன். நீ கதறி அழுவதை பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை! என்கிறார் ரஜினி.

மன உறுதி படைத்த சுஜாதா என்னை அழவைக்க மட்டும் உன்னால் முடியாது என்று கூறிவிட்டு, திருவனந்தபுரத்திற்கு ரயில் ஏறுகிறார்.

கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைக்கிறார், கமல்.

இந்தப் படத்தில் ஆன்டி ஹீரோ வேடத்தில் அற்புதமாக நடித்திருந்தார், ரஜினி.
மலையாளம் கலந்த தமிழிலே பேசி நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் கமல்.
சுஜாதாவும் மிகச்சிறப்பாக நடித்தார்.

தன் மகன், சுஜாதாவை மணந்து அநியாயமாக கைவிட்டதை அறியும் ரஜினியின் தாயார். வேலைக்காரியாக மாறி சுஜாதாவுக்கு உதவுவது அருமையான குணச்சித்திர கதாபாத்திரம்.

மொத்தத்தில் ‘அவர்கள்’ பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு, ரஜினியின் நடிப்புக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ‘எனக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்த படம் அவர்கள்’ என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment