Wednesday 26 February 2014

Leave a Comment

தற்கொலை செய்யும் அளவிற்கு வறுமையால் வாடிய எம். எஸ். வி..!



இளம் வயதில் வறுமையால் வாடினார். தாயாருடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வாழ்க்கையின் ஓரத்துக்குச் சென்றார். பிறகு எதிர்நீச்சல் போட்டு, புகழின் சிகரத்தை அடைந்தார். அவர்தான் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.

எம். எஸ். விஸ்வநாதனின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமம். தந்தை பெயர் சுப்பிரமணியன் தாயார் நாராயணி.

கேரள வழக்கப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு. மனையங்கக் ஹவுஸ் என்பது எம். எஸ். விஸ்வநாதனின் பரம்பரை பெயர் அதனால்தான் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என சேர்த்து எம். எஸ். விஸ்வநாதன் ஆனார்.

எம். எஸ். விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். அப்போது தந்தை சுப்பிரமணியன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்து வந்தார்.

எம். எஸ். விஸ்வநாதன் குழந்தையாக இருந்தபோது சில பிரச்சினை காரணமாக சுப்பிரமணியன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின்னர் திருச்சியில் ஜெயில் வார்டர் வேலை கிடைத்தது. தாய் வழி தாத்தா கிருஷ்ணன் நாயரும் அங்கே ஜெயில் வார்டர் பணியில் இருந்தார்.

திருச்சியில் இருந்தபோது சுப்பிரமணியன் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது எம். எஸ். விஸ்வநாதனுக்கு 4 வயது.

தந்தை இறந்த 15 நாட்களுக்குள் இன்னொரு இழப்பும் ஏற்பட்டது. விஸ்வநாதனின் தங்கை வேசம்மாவும் மரணம் அடைந்தார். இந்த சோகங்களை 4 வயதில் விஸ்வநாதன் தாங்க நேரிட்டது.

எனவே ஊரார் விஸ்வநாதனை அதிர்ஷ்டமில்லாதவன் என்று ஏளனமாகப் பேசினார்கள்.

இதனால் விஸ்வநாதனின் தாயார் நாராயணி, மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதனால் ஒரு விபரீத முடிவு எடுத்தார்.

ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு மகன் விஸ்வநாதனை எழுப்பினார் நாராயணி. மகனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் சாலைக்கு சென்றார். ஒரு குளக்கரையில் வந்து நின்றனர்.

மகனை குளத்தில் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

என்ன நடக்கப்போகிறது என்பதை லேசாகப் புரிந்துகொண்ட விஸ்வநாதன் ‘நீ முதலில் குதிம்மா’ என்றார்.

‘ஏன்டா, அப்படிச் சொல்றே?’ என்றார் தாயார்.

‘என்னை தள்ளிவிட்டு, நீ அப்புறம் குதிக்காமல் தப்பிச்சுப் போயிட்டா என்ன செய்வது?’ என்றார். விஸ்வநாதன்.

இப்படி தாய்க்கும், மகனுக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது அங்கே தாத்தா கிருஷ்ணன் நாயார் வந்தார். நடந்ததை தெரிந்துகொண்டார்.

நாராயணிக்குட்டி செத்துப்போயிட்டா எல்லாம் சரியா போயிடுமா? இதென்ன பைத்தியக்காரத்தனம் அந்த புள்ளைய குளத்தில் தள்ள எப்படி உனக்கு மனம் வந்தது? நான் இருக்கும்போது உனக்கென்ன கவலை? உங்களையெல்லாம் நான் காப்பாற்றாமல் போயிடுவேனா? வா வீட்டுக்கு’ என்று ஆறுதல் கூறி இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் கிருஷ்ணன் நாயருக்கு திருச்சியிலிருந்து தெற்கு மலபாரான கண்ணனூருக்கு வேலை மாற்றல் உத்தரவு வந்தது.

கண்ணனூர் போனவுடன் அங்குள்ள ஒரு பள்ளியில் விஸ்வநாதனை சேர்த்தார். ஆனால் விஸ்வநாதனுக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லை.

பள்ளிக்கு செல்லாவிட்டால் தாத்தா திட்டுவார் என்பதற்காக பையை எடுத்துக்கொண்டு கிளம்புவார்.

மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக விஸ்வநாதன் பெயரை ஆசிரியர் படித்ததும் உள்ளேன் ஐயா என்று குரல் கொடுத்து விட்டு, அடுத்த சில நிமிடத்தில் விஸ்வநாதன் மாயமாய் மறைந்துவிடுவார்.

பள்ளிக்கூடம் அருகே ஓர் இசைப்பள்ளி இருந்தது. அங்கு சென்று ஓரமாக நின்று பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருப்பார். பள்ளிக்கூடம் விடுகிற நேரத்தில் மீண்டும் புத்தகத்தை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புவார்.

எம். எஸ். விஸ்வநாதனுக்கு படிப்பைவிட இசை ஆர்வமே அதிகமாக இருந்தது.

0 comments:

Post a Comment