Wednesday 26 February 2014

Leave a Comment

எம். ஜி. ஆரின் தந்தை வழி பூர்வீகம்..!



இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கோபாலன் 1920ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கிவிட ராமுபிள்ளை வேலுப்பிள்ளை ஆறுதல் சொன்னார்கள்.

அதன் பின் தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கிய சொந்த வீட்டில் அவர் சேர்த்துவைத்த பணம், நகைகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு கண்டியிலே வாழ்ந்து வந்தார். இந்தக்காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகின்றார்கள்.

ஏற்கனவே தன் கணவரைப் பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் துன்பம் ஏற்பட்டது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவரது மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம். ஜி. ஆர் தன் தாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.

ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தானடா பெற்ற அப்பாவையும், உன் கூடப் பிறந்த 3 பேரும் செத்துப் போனார்களடா என்று எம். ஜி. ஆரை கட்டிப் பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுக்கள் எந்தத் கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்தத் தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளையின் உதவியை நாடினார்.

அப்போது அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டிப் பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது என கூறினர். அப்போது சத்திய தாய், எனக்கு சொந்த இடம் என்பது கேரள வடவனூர்தான்.

அந்த ஊர் வேண்டாம் என்றுதான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்த சமயம்தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை போய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்தியபாமா தன் குடும்ப நிலைமைகளைப் பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.

அதன்படி அவருடைய அழைப்பின்படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்துவிடுங்கள் என்று சொல்லுகிறார். அதன்படி வேலுப்பிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றார்கள்.

சத்தியபாமா நாராயணனின் உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா கூறினார். அதன்படி, இந்த இரண்டு பிள்ளைகளையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பாடசாலையில் சேர்த்து விட்டார்கள்.

மேலும் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கிக்கொடுத்து விட்டு இந்தப் பிள்ளைகளின் படிப்புக்கான செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகியது. இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடுதான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவதாக நாராயணனிடம் கூறினார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்த சத்தியபாமாவின் நிலைமைகளை பார்த்து இந்த அழகான பிள்ளைகளுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.

இந்த நிலையில் எம். ஜி. ஆருக்கும், சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சங்கரபாணி தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பாடசாலை முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாகப் படித்தவர் நீதிபதியாகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர். அவர் போல நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும்.

இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திர த்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டுக்கொண்டு பாடசாலை சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம். ஜி. ஆருக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.

0 comments:

Post a Comment