நடிகையும், எம்.பியுமான ரம்யாவை கடத்திச் சென்று திருமணம் செய்ய போவதாக செய்தித்தாளில் பரபரப்பு விளம்பரம் வெளியிட்ட சினிமா டைரக்டரை கைது செய்து பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
நடிகர் சிம்பு ஜோடியாக ‘குத்து' படத்தில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் தற்போது மண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 14-ந் தேதி, காதலர் தினத்தன்று பெங்களூரில் வெளிவரும் ஆங்கில நாளிதழில் கன்னட சினிமா டைரக்டரும்-நடிகருமான வெங்கட் என்பவர் நடிகை ரம்யாவை பனசங்கரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கன்னட மொழியில் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்ததாவது :-
"ரம்யா, ஏன் என்னுடைய எண்ணங்களை நீ புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். என்னுடைய காதலை ஏற்று கொள்வாயா? மாட்டாயா? என்று எனக்கு தெரியாது.
அடுத்த வாரம் உன்னை கடத்திச் சென்று பனசங்கரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்வேன். இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இது படத்திற்காக சாதாரணமாக எழுதப்பட்டது அல்ல. உண்மையில் இது நடைபெறும்.
படத்திற்கு ஹுச்சா வெங்கட் ( பைத்தியகார வெங்கட்) என்ற தலைப்பு வைத்துள்ளேன். கதை, திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். இந்த படத்தை என்னுடைய பெற்றோர் (லட்சுமி-கவுரம்மா தம்பதி), என்னுடைய மனைவி ரம்யா, மாமியார் ரஞ்சிதா (ரம்யாவின் தாய்) ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்." என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த விளம்பரம் குறித்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவுராத்கர் கூறுகையில், ‘‘ஆங்கில நாளிதழில் வெளியான விளம்பரம் குறித்து ரம்யாவிடம் இருந்தோ, அவருடைய தரப்பில் இருந்தோ எந்த புகாரும் வரவில்லை.
அதனைத் தொடர்ந்து பெங்களூர் கப்பன்பார்க் போலீசார் தாமாகவே முன்வந்து ரம்யாவுக்கு எதிராக விளம்பரம் செய்த சினிமா டைரக்டர்-நடிகரான வெங்கட் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நடிகர் வெங்கட்டை கப்பன் பார்க் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வெங்கட்டின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் தங்களது மகன் வெங்கட் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க வெங்கட்டை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
கடந்த 2010-ம் ஆண்டும் ஜூலை மாதமும் நடிகை ரம்யாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக பரபரப்பைக் கிளபியவர் தான் இந்த வெங்கட். ஆனால், இப்போது போலவே அப்போதும் அவர் கூறியதை ரம்யா மற்றும் கன்னட திரையுலகினர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment