தமிழ்சினிமாவில், திடீரென தோன்றி, பரபரப்பான பட நிறுவனமாக விளங்கி, அதே வேகத்திலேயே வௌங்காமல்போன தயாரிப்பு நிறுவனங்களை பற்றி ‘ஃப்ளாஷ்பேக்’கினால் பளிச்சென நினைவில் மோதுகிறது – பிரமிட் சாய்மிரா நிறுவனம்.
பி.எஸ்.சாமிநாதன் என்பவரால் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிரமிட் சாய்மிரா, படத்தயாரிப்பு, பட விநியோகம், திரையரங்கம் என எடுத்த எடுப்பிலேயே பல துறைகளில் (அகலக்)கால் பதித்தது.
ஒரே நேரத்தில் பல படங்களை தயாரிப்பது, வருஷத்துக்கு 50 படங்களை தயாரிப்பது என்ற ரீதியில் அதிரடி அறிவிப்புகளைச் செய்து, இன்றைய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எல்லாம் அன்றைக்கே முன்னோடியாக விளங்கினார் சாமிநாதன்.
சாய்மிராவின் இப்படிப்பட்ட அதிரடி அறிவிப்புகளால் கோடம்பாக்கமே குலுங்கியது.
இத்தனையும் சில வருடங்கள்தான்…!
யாருமே நினைத்தே பார்க்காத வகையில், அல்லது அத்தனை பேரும் ஆவலாக எதிர்பார்த்தபடி, திடீரென ஒருநாள் குடைசாய்ந்தது பிரமிட் என்ற கோபுரம்.
அதற்குமுன், சாமிநாதனின் பார்ட்னரான பிரமிட் நடராஜன் பத்து கோடியை வாங்கிக் கொண்டு ஒதுங்கினார்.
மற்றொரு பார்ட்னரான நாராயணனும் பெரும்தொகையோடு நடையைக் கட்டினார்.
பட்ட காலிலேயே படும் என்பதுபோல் பங்குசந்தையில் மோசடி செய்ததாக பிரமிட் சாய்மிரா மீது குற்றம்சாட்டியது செபி.
விளைவு…வெகு விரைவிலேயே மூடுவிழா கண்டது சாமிநாதனின் பிரமிட் சாய்மிரா.
அதன் பிறகு பிரமிட் சாய்மிரா என்ற பெயரை மட்டுமல்ல, அதன் நிறுவனரான பி.எஸ்.சாமிநாதனையும் சுத்தமாக மறந்துபோனது தமிழ்த்திரையுலகம்.
ஆமாம்..எங்கிருக்கிறார் பி.எஸ்.சாமிநாதன்?
விசாரித்தபோது கிடைத்த தகவல் பகீர் ரகம் இல்லை, பரிதாப ரகம்!
இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தநிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் சாமிநாதன்.
சுமார் 40 முதல் 50 லட்சங்கள் இருந்தால் இரண்டு சிறுநீரகங்களையும் மாற்றுவதன் மூலம் சாமிநாதனின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
தற்போதைய சூழலில், வாழ்க்கை நடத்தவே முடியாத அளவுக்கு பொருளாதார சிக்கலில் சிக்கிக்கெண்டிருக்கும் சாமிநாதனால் 50 லட்சம் செலவு செய்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பே இல்லை.
ஆனால் நடிகர் மாதவன் நினைத்தால் சாமிநாதனின் உயிரைக் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது.
பிரமிட் சாய்மிரா வெற்றிகரமான நிறுவனமாக இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு எவனோ ஒருவன் என்ற படத்தில் நடித்தார் மாதவன்.
பாலிவுட் இயக்குநர் அப்பாஸ் மஸ்தான் உடன் இணைந்து அவரே தயாரித்தார்.
எவனோ ஒருவன் படத்தை டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் பிரமிட் சாய்மிரா மூலம்தான் வெளியிட்டார் மாதவன். அதற்காக இரண்டரை கோடியை பெற்றுக் கொண்டார் மாதவன்.
எவனோ ஒருவன் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அந்தவகையில் சாமிநாதனுக்கு மாதவன் 80 லட்சம் தர வேண்டும். பல தடவை கேட்டும் மாதவன் தரவில்லையாம்.
தன் சிறுநீரகங்களை இழந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இந்தநிலையிலும்கூட கொடுக்க வேண்டிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் மாதவன், மனிதனே இல்லை!
மாதவன் மட்டுமல்ல, பிரமிட் சாய்மிராவிடம் பண உதவி பெற்று, படம் தயாரித்து தருவதாகச் சொல்லி பல தயாரிப்பாளர்களும் பல லட்சங்களை ஏமாற்றி உள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் சாமிநாதனுக்கு 50 லட்சம் தர வேண்டும்.
சாமிநாதனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக் கொடுப்பதன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்ற இதுவே சரியான நேரம்.
என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்…!
0 comments:
Post a Comment