தற்கொலை பற்றிய உரையாடல்கள் அன்றாட ஊடக விவாதங்களின் ஓர் அங்கமாக உள்ளன. ஆனால் ஏன் தற்கொலை நடக்கிறது என்பது குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே உள்ளது.
வாழ்க்கையில் பார்த்திராத, பழக்கமே இல்லாத ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டால்கூட அது குறித்து எல்லாருக்கும் அபிப்ராயங்கள் உள்ளன. ‘என்ன கோழைத்தனமான செயல்’ என்றும் ‘மிகவும் பலவீனமான நபர்’ என்றும் பலரும் சொல்வதைக் கேட்கிறேன். மேம்போக்கான தீர்ப்பு தொனிக்கும் கருத்துகள் அவை. எல்லாம் அறிந்த உணர்விலிருந்தும், பயத்திலிருந்தும்கூட இந்த வார்த்தைகள் எழுகின்றன. தற்கொலை செய்யும் நபர்களை அக்காரியத்திற்குத் தூண்டிய எண்ணங்கள் என்னவென்று நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத நிலையிலிருந்து எழும் கருத்துகள் இவை.
வாரக்கணக்கில் தலைப்புச் செய்தியில் இருந்த சுனந்தா புஸ்கரின் பயங்கர மரணத்தை, பிலிப் ஹாப்மனின் மரணச்செய்தி இடம்பெயர்த்து விட்டது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேரில் 10.3 பேர் தற்கொலை செய்துகொள்வதாக மருத்துவ ஆய்விதழான தி லான்செட் கூறுகிறது. இந்தியாவில் நடக்கும் கொலைகளைவிட மூன்று மடங்கு தற்கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன என்று இந்தக் கணக்கின் வாயிலாகத் தெரியவருகிறது.
இவ்வளவு பெரிய முடிவை எடுக்க அவர்களை எது தள்ளுகிறது? இந்தப் பிரச்சினை, ஒரு நபரின் மனவலிமை தொடர்புடையதோ, குணாதிசயம் தொடர்பானதோ அல்ல. உயிரியல், மரபியல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்கள், சமாளிக்கும் முறைகள் மற்றும் குடும்பரீதியான காரணிகள் ஆகியவை தற்கொலை முடிவுக்குப் பின்னணியில் செயல்படுகின்றன.
தற்கொலைக்கான காரணிகள்
தற்கொலையைப் புரிந்து கொள்ளத் தத்துவவாதிகளும் உளவியல் நிபுணர்களும் மற்றவர் களைப் போலவே போராடியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு சமூகவியலாளர் எமிலி டர்க்கைம் தற்கொலைக்கான கலாச்சார, சமூகவியல் காரணங்களை முதலில் ஆய்வுசெய்தார். அவர் அதை மூன்றுவகையாகப் பிரித்தார். சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்படும் நபர் தனது ஈகோவை நிலைநாட்ட மேற்கொள்வது முதல்முறை. இரண்டாவது பொதுநலநோக்கில் தற்கொலை செய்வது. இது போர்களில் வீரர்கள் நாட்டுக்காக உயிர்துறப்பதற்கு ஒப்பானது. நெறிபிறழாமல் நல்ல முறையில் நடக்கும் ஒரு மனிதரின் வாழ்வில் ஏற்படும் தாறுமாறான குளறுபடிகளால் ஏற்படும் சீர்குலைவால் செய்துகொள்ளும் தற்கொலை மூன்றாவது வகை.
தற்கொலை செய்யும் முடிவை எடுப்பவர்கள் தங்கள் தற்கொலை மூலம் பழிவாங்கல், வலியிலிருந்து தப்பிப்பது, மீட்பு, தியாகம் போன்ற விஷயங்கள் நிறைவேறுவதாக நம்புவதாகத் தற்காலச் சமூக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நாம் வாழும் கலாச்சாரச் சூழலுடன் தொடர்புடைய உயிரியல், மரபியல் மற்றும் சமூகக் காரணிகள்தாம் இந்தக் கற்பனைகளை விளைவிக்கின்றன.
உயிரியல்ரீதியாக, நரம்புத் தொடர்பிணைப்புப் பொருளான செரோடோனின், ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன. செரோடோனினே தற்கொலை முடிவில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
தற்கொலைக்கான மரபியல் மற்றும் உயிரியல் காரணங்கள் குறித்து வெவ்வேறு வகை மக்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்களிடம் உள்ள தற்கொலை நடத்தையை ஆராய்ந்தபோது, அவர்களிடம் அதிக வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மரபியல் மட்டுமே காரணம் அல்ல
வெறுமனே மரபியல் விதியாக மற்றுமே தற்கொலையை எளிதாக நிர்ணயித்துவிட முடியாது. பாலினம், வயது, திருமண நிலை, உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் என அனைத்தும் ஒருவரது தற்கொலை முடிவுக்குக் கார்ணம் ஆகின்றன.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தற்கொலைக்கு முயலும் ஆண்கள்தான் அதிகம் பேர் தங்கள் முயற்சியை நிறைவேற்றி விடுகின்றனர். 15 முதல் 29 வயதுக்குள்தான் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். வயது முதிந்தோர் மற்றும் திருமணமானவர்கள் அதிகம் தற்கொலையில் ஈடுபடுவதில்லை.
சந்தோஷம், துக்கம், கவலைகள், வெற்றிகள், தோல்விகளைக் கையாள்வது எப்படி என்று தெரியாதவர்களும், போதுமான தொடர்புத் திறன் அற்றவர்களும், மற்ற நபர்களிடம் உணர்வுரீதியான உறவை மேற்கொள்ள முடியாதவர்களிடமும் குடும்பரீதியான வரலாற்றின் தாக்கம் உள்ளது.
சமூக உளவியல் அடிப்படையில் பார்த்தால், போதை பயன்படுத்துபவர்கள், தற்கொலை விருப்பம் உள்ளவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் இருக்கும் குடும்பங்களிலிருந்து வரும் நபரிடம் தற்கொலை எண்ணம் அதிகம் இருக்கும். உடல்நலமின்மை, ஊனம், நாட்பட்ட உடல்வலி போன்றவையும் தற்கொலைக்கு முக்கியக் காரணமாக உள்ளன. தீராத துயரத்துக்கு முடிவு காண்பது நல்ல வழியாகத் தெரிகிறது. ஆளுமைக் குறைபாடு, உளச்சிதைவு மற்றும் அடிக்கடி மாறும் மனநிலை இயல்பும் காரணமாக உள்ளன.
என்ன செய்யவேண்டும்?
குடும்பங்களில் தற்கொலை தொடர்பாக எழும் எண்ணங்கள் குறித்து கூடி உட்கார்ந்து யாரும் பேசுவதேயில்லை. ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் குறித்துக்கூட, நேர்மையாக யாரும் உரையாடுவதேயில்லை. மனநலக் குறைபாடு தொடர்பாக சமூக விலக்கமே நம்மிடம் உள்ளது. பலவீன மனம் கொண்டவர்கள் தாங்கள் அவ்வாறு இருப்பதை ஒரு குறையாகக் கருதுகிறார்கள். உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்மீது வெறுப்பு ஏற்படுகிறது. மற்றவரது விரக்தியை எதிர்கொள்ளும்போது, சுய இயலாமை குறித்தும் சகிப்பின்மை ஏற்படுகிறது.
ஒருவர் தற்கொலை மனநிலையில் இருப்பதை உங்களிடம் வெளிப்படுத்தினாலோ, அப்படி அவர் இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலோ செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன. முதலில் அது தொடர்பாக பேசும் நெருக்கடியை முதலில் களையுங்கள். அந்த நபர் குறித்தும் அவர் உங்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயத்திலும் அக்கறை கொள்ளுங்கள். உங்களது அனுதாபத்தை அவரிடம் தெரிவியுங்கள். அவர்களது துயரம் உங்களையும் வருத்துவதை நீங்கள் தெரியப்படுத்துங்கள். எந்த நிலையிலும் அவருடன் நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்த்துங்கள்.
உளவியல் மருத்துவர், மன நல ஆலோசகர் யாரையாவது அந்த நபர் பார்த்தாரா என்பதைக் கேளுங்கள். அப்படி அவர் ஆலோசிக்காவிட்டால் அதற்கு அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேளுங்கள்.
ஆதிகாலத்திலிருந்தே, மனிதர்கள் தற்கொலை குறித்து எதிரான மனநிலையையே கொண்டுள்ளனர். சாக்ரடீஸ் தற்கொலையை எதிர்த்தார். “கடவுளின் உடைமைகளின் ஒன்று மனிதன், அவன் தன்னைத் தானே கொல்லக் கூடாது” என்றும் கூறினார். அப்படிக்கூறிய சாக்ரடீஸ், தனக்கு அரசு கொடுத்த மரண தண்டனையை அடுத்து விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தேர்வையும் இப்படி நியாயப்படுத்தினார்: “கடவுள் ஒருவரைக் கட்டாயப்படுத்தும் நிலையில் தற்கொலை நியாயமானது” என்றார்.
சாக்ரட்டீஸ் உணர்ந்த கட்டாயம் கடவுளால் உருவானதல்ல. நாம் ஒவ்வொருவரும் அதன் விளைவை உணர்ந்தால் தற்கொலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றல்ல.
0 comments:
Post a Comment