Saturday 15 February 2014

Leave a Comment

சத்யராஜ் - வாழ்க்கை வரலாறு


கோவை மாவட்டத்தில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர், சத்யராஜ் அவர்கள். ஒரு வில்லனாகத் திரையுலகில் அறிமுகமான அவர், ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தின் மூலமாக சிறந்த நடிகராக மாறி, ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்கி, ‘லீ’ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார்.

 ‘என் கேரக்டரே புரிஞ்சிக்க மட்டிங்கறியே’, ‘என்ன மா…. கண்ணு’, ‘தகடு தகடு’ என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். கொங்குத் தமிழ் பேசி, தனக்கென உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தவர். ஹீரோ, எதிர்மறைக் கதாபாத்திரம், காமெடி என அனைத்து வகையான கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு ‘பெரியார்’ திரைப்படமும், ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படமும் வரலாற்று சாதனைப் படைத்தப் படங்களாக மாறி, அவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

அவர் நாயகனாக நடித்த காலக்கட்டங்களில், அனைத்து முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தும் புகழ்பெற்றார். தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘பெரியார் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘விஜய் விருது’ என எண்ணற்ற விருதுகளை வென்று, இன்றளவும் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்பால் நிலைத்து நிற்கும் சத்யராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

  • பிறப்பு: அக்டோபர் 3, 1954
  • பிறப்பிடம்: கோயம்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  • பணி: திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பளர்
  • நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சத்யராஜ் அவர்கள், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும்  கோயம்பத்தூரில்  அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் சுப்பையா மற்றும் நாதாம்பாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர், ரெங்கராஜ். மேலும், அவருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

தனது ஆரம்பகாலப் பள்ளிப்படிப்பை கோயம்புத்தூரில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வெண்ட்டில் தொடங்கினார். தனது பத்தாம் வகுப்பு வரை, கோவையில் உள்ள ராம்நகர் உயர்நிலைப்பள்ளியில் படித்த அவர், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வரலாறு மற்றும் பூகோளப் பாடங்களில் முதல் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிப் பெற்றார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இளநிலைக் கல்விப் பெறுவதற்காக கோயம்புத்தூர் அரசு கலை கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர், தாவரவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் அவர்கள், பி.யூ.சி படிக்கும் போது, அவரது சக மாணவனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் அவர்கள் இருவரது நட்பு, அங்கு தான் தொடங்கியது.

திரையுலகப் பிரவேசம்

தனது இளம் பருவத்திலிருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து வந்த அவர், ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பை நேரில் கண்டார். அப்போது, அதன் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் மணியன் அவர்களை நேரில் கண்ட அவர், திரையுலகில் நுழைய வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார். அதன் வெளிப்பாடாக, கோமல் சத்தியநாதன் அவர்களின் நாடகக் குழுவில் சேர்ந்த அவர், ‘கோடுகள் இல்லாத கோலங்கள்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அக்கதாபாத்திரம் பெரிதளவு பேசப்படாததால், ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ என்ற பல்வேறு படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும், அவ்வப்போது ஒரு சில வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

திரையுலக வாழ்க்கை

தயாரிப்பு நிர்வாகியாக செயல்பட்டுக் கொண்டிருந்த சத்யராஜ் அவர்களுக்கு, பிரபல இயக்குனரான டி. என். பாலு அவர்கள், அவரது அடுத்த படமான ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். மக்களிடையே, அவரது நடிப்பு வெகு விரைவாக சென்றடைந்ததால், அவர் தொடர்ந்து ‘ஏணிப்படிகள்’ (1979), ‘மூன்று முகம்’ (1982), ‘பாயும் புலி’ (1983), ‘நூறாவது நாள்’ (1984), ‘எனக்குள் ஒருவன்’ (1984), ‘நான் மகான் அல்ல’ (1984), ‘சாவி’ (1985), ‘நான் சிகப்பு மனிதன்’ (1985), ‘திறமை’ (1985), ‘முதல் மரியாதை’ (1985), ‘பகல் நிலவு’ (1985), ‘காக்கிச்சட்டை’ (1985), ‘பிள்ளை நிலா’ (1985), ‘விக்ரம்’ (1986), ‘தர்மம்’ (1986), ‘இரவு பூக்கள்’ (1986), ‘மந்திரப்புன்னகை’ (1986), ‘மிஸ்டர் பாரத்’ (1986), ‘முதல் வசந்தம்’ (1986), ‘ரசிகன் ஒரு ரசிகை’ (1986), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986) போன்ற திரைப்படங்களில் எதிர்மறையானக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்யராஜை, பாரதிராஜா அவர்கள், அவரது அடுத்தப் படமான 1986ல் ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தில் கதாநாயகனாக வடிவமைத்தார். அப்படத்தைத் தொடர்ந்து, முழுமையான கதநாயகனாக மாறிவிட்ட அவர், முன்னணி கதாபாத்திரங்களிலே நடித்து வந்தார்.

‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ (1987), ‘மக்கள் என் பக்கம்’ (1987), ‘வேதம் புதிது’ (1987), ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘பூவிழி வாசலிலே’ (1987), ‘அண்ணாநகர் முதல் தெரு’ (1988), ‘ஜீவா’ (1988), ‘புதிய வானம்’ (1988), ‘சின்னப்பதாஸ்’ (1989), ‘தாய் நாடு’ (1989), ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ (1989), ‘உலகம் பிறந்தது எனக்காக’ (1990), ‘நடிகன்’ (1990), ‘புது மனிதன்’ (1991), ‘பிரம்மா’ (1991), ‘திருமதி பழனிச்சாமி’ (1992), ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘பங்காளி’ (1992), உடன் பிறப்பு’ (1992), ‘ரிக்க்ஷா மாமா’ (1992), ‘ஏர்போர்ட்’ (1993), ‘கட்டளை’ (1993), ‘வால்டர் வெற்றிவேல்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வில்லாதி வில்லன்’ (1995), ‘மாமன் மகள்’ (1995), ‘சேனாதிபதி’ (1996), ‘பகைவன்’ (1997), ‘கல்யாண கலாட்டா (1998), ‘மலபார் போலீஸ்’ (1999), ‘புரட்சிக்காரன்’ (2000),  ‘அசத்தல்’ (2001), ‘மாறன்’ (2002), ‘மிலிட்டரி’ (2003), ‘ஜோர்’ (2004), ‘இங்கிலீஷ்காரன்’ (2005), ‘வெற்றிவேல் சக்திவேல்’ (2௦௦5), கோவை பிரதர்ஸ்’ (2௦௦5), ‘பெரியார்’ (2௦௦6), ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ (2௦௦7), ‘நண்பன்’ (2௦12), ‘நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ’ (2௦12) போன்ற திரைப்படங்கள் அவர் நடிப்பில் வெற்றிப் பெற்றவையாக விளங்குகிறது.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படம் மூலமாக ஒரு இயக்குனராகவும் உருவெடுத்தார். தனது மகனான சிபிராஜ் அவர்களுடன் இணைந்து, பல படங்களில் நடித்து வந்த அவர், அவரது மகனைக் கதாநாயகனாகக் கொண்டு ‘லீ’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இப்படம் மூலமாக, அவர் ஒரு தயாரிப்பாளர் என்பதையும் தமிழ்த் திரையுலக வரலாற்றில் பதிவு செய்தார்.

எம். ஜி. ஆர் மீது பற்று

எம். ஜி. ஆரின் தீவிர பக்தனாக இருந்த சத்யராஜ் அவர்கள், அவருடைய தங்கையின் திருமணத்திற்கு அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை பத்திரிக்கை வைத்து அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று, எம்.ஜி.ஆர் அவரது துணைவியார் மற்றும் அமைச்சர் முத்துசாமியுடன் அத்திருமணத்திற்கு சென்றதால், அவரது உயர்ந்த உள்ளத்தைப் பாராட்டி அனைத்துத் திரையுலகினரும் மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அவரிடம் ஆசியும் பெற்றனர். அவரது வருகைக்கு நன்றி செலுத்த சென்ற அவர், எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார். இதனால், அவரை ‘எம்.ஜி.ஆரின் பித்தன்’ என்று சொன்னாலும் அது மிகையாகாது.

இல்லற வாழ்க்கை

சத்யராஜ் அவர்கள், மகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் பிறந்தனர்.

விருதுகள்

தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி விருதை’ வென்றார்.

1987 – ‘வேதம் புதிது’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார்.

1991 – தமிழ்நாடு அரசு அவருக்கு ‘எம்.ஜி. ஆர் விருது’ வழங்கி கௌரவித்தது.

2007 – ‘பெரியார் விருது’ அவரது ‘பெரியார்’ படத்திற்காக வழங்கப்பட்டது.

2007 – சத்தியபாமா பல்கலைக்கழகம் அவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.

2007 – ‘ஒன்பது ருபாய் நோட்டு’ திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதினைப்’ பெற்றுத்தந்தது.

2012 – ‘நண்பன்’ படத்தின் சிறந்த துணைக் கதாபாத்திரத்திற்கான ‘விஜய் விருதை’ வென்றார்.

0 comments:

Post a Comment