Thursday, 6 February 2014

Leave a Comment

ஹாலிவுட் நடிகர் ரியான் கோஸ்லிங் கூப்பிட்டால்கூட,. நோ சொல்வேன்...




திரைப்படத்துறையில் பரபரப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும் இளைய நட்சத்திரங்களுள் ஒருவரான அழகிய புன்னகையும், வசீகரத் தோற்றமும் கொண்ட ஸ்ருதிஹாசன் தன்னுடைய தந்தையின் படத்தில் நடிப்பதற்குத் தேதிகள் ஒத்துவரவில்லை என்று மறுத்துள்ளார். இந்த செய்தியானது இருவருக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியாகக் கூட வெளியில் பரவியது. ஆனால், இந்த யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் ஸ்ருதியே தனது மும்முரமான கால்ஷீட்டினால் தற்போது வேறு எந்தப் படத்திலும் நடிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

'ரமணா' தமிழ்த் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'கப்பார்', 'வெல்கம் பேக்' இந்தித் திரைப்படம், 'ரேஸ் குர்ரம்' தெலுங்குப் படம் மற்றும் சில பெயரிடப்படாத தமிழ்ப் படங்களில் ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். ஒரு படத்தின் படப்பிடிப்பிலிருந்து அடுத்த படத்திற்கு என்று இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பதாகவும் தனக்கென்று தனியான நேரமே இல்லையென்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இதே முறையில்தான் வேலை செய்துகொண்டிருப்பதாகக் கூறிய அவர் புது வருடத்தில்கூட சில நாட்கள் ஒய்வுக்குப்பின்னர் நடிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறினார். விருப்பத்துடனே இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், சமீபத்தில் மேற்கொண்ட குடல் அறுவை சிகிச்சையின் போதும் சில நாட்களே ஒய்வு எடுத்ததாகவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.

இந்த சமயத்தில் தன்னுடைய தந்தை கமல்ஹாசன் அவருடைய 'உத்தம வில்லன்' படத்தில் நடிப்பது பற்றிக் கேட்டதாகத் தெரிவித்த ஸ்ருதி தேதிகள் இல்லையென்பதால் நடிக்க இயலாது என்பதை அவருக்குத் தெரிவித்து விட்டதாகவும் கூறினார். உண்மையில் ஹாலிவுட் நடிகரான ரியான் கோஸ்லிங் கூப்பிட்டால்கூட தன்னால் இப்போது ஒப்புக்கொள்ளமுடியாது என்று புன்னகைத்தபடியே அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment