Friday 21 March 2014

Leave a Comment

அமரன் - திரைவிமர்சனம்...!



மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ அமரன், நண்பர்களின் அவமானத்திற்கு பிறகு மதுரையில் உள்ள தனது அத்தையின் காய்கறிக்கடையில் வேலை செய்கிறார். அங்கு காய்கறி வாங்க வந்த போலிஸாருடன் சண்டை போடுவதோடு, போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார்.

இதனால் பயந்து போன அமரனின் அத்தை, அமரனை சென்னைக்கு அனுப்பிவிடுகிறார்.சென்னைக்கு செல்லும் ரயிலில் நாயகி சோனுவை சந்திக்கும் அமரன், அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரோ திடீரென மயக்கமாகி விழுந்துவிடுகிறார். சோனுவை அமரன் காப்பாற்றுகிறார். நினைவு திரும்பிய சோனுவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சோனுவும், அவரது காதலனும் பெற்றோர்களுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்ய இந்த ரயிலில் ஏறியதாகவும், யாரோ மயக்க பிஸ்கட் கொடுத்து தன்னை மயக்கிவிட்டு, காதலனை கடத்திக்கொண்டு சென்றுவிட்டாதாகவும் கூறுகிறார். சோனுவின் காதலனுடன் சேர்த்து வைக்க அமரன் முயற்சிக்கும்போது தான் காதலனை சோனுவின் தந்தையே கொன்று விட்டார் என்றும், சோனுவையும், அமரனையும் கொலை செய்ய தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் போலீஸ் அதிகாரி சம்பத்தும் அமரனை பழிவாங்க துடிக்கிறார். வில்லன்களிடம் இருந்து அமரன் – சோனு தப்பித்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.

கதை வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் படு சொதப்பல் அதைவிட கேரக்டரகளை புரிந்து கொள்ளாமலே நடிக்கும் நடிகர்களை வைத்து இயக்குனர் ஜீவன் எப்படித்தான் படத்தை இயக்கினாரோ தெரியவில்லை.இந்த படத்தை ஒரு நல்ல நடிகர், நடிகையை வைத்து எடுத்திருந்தால் கண்டிப்பாக ஹிட்படம் இது.

படத்தை பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை. கொஞ்சம் பொறுத்திருந்தால் ஏதாவது டிவியில் போடுவார்கள். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். தியேட்டரில் சென்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லாத படம்.

0 comments:

Post a Comment