ஜெயம் ரவி-அமலாபால் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தை ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய சமுத்திரகனி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் சக்ஸஸ் மீட் இன்று சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சமுத்திரகனியும், நடிகர் ஜெயம் ரவியும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின்போது சமுத்திர கனி பேசியதாவது: ‘நிமிர்ந்து நில்’ படத்தை பார்த்த சமூக ஆர்வலர்களும், போலீஸ் அதிகாரிகளும் எனக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்தை வலியுறுத்தி படத்தை எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தனர். இப்படத்திற்கு பிறகு சிறு பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். நமது நாட்டில் 40 சதவீதம் மக்கள் கிராமங்களிலும், காடுகளிலும் வாழ்கின்றனர்.
அவர்களுடன் தங்கியிருந்து, அவர்களுடைய வாழ்க்கையை பற்றிய கதையை படமாக எடுக்கவுள்ளேன் என்று பேசினார்.
ஜெயம் ரவி பேசும்போது, நான் சமீபகாலமாக ஆக்ஷன் படங்களாக தேர்வு செய்து நடிப்பதற்கு காரணம், எனக்கு இருக்கிற சாக்லேட் பாய் என்ற இமேஜை உடைப்பதற்காகத்தான்.
‘பேராண்மை’, ‘அமீரின் ஆதிபகவன்’ ஆகிய படங்களில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர்கள் நம்புவதால் அதுபோன்ற படங்களிலும் நடித்தேன். ஆக்ஷன் படங்கள் மட்டுமில்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.
நடிப்பதற்கு மொழி ஒரு பிரச்சினை அல்ல. நல்ல கதை இருந்தால் மட்டும் போதும்.
எனக்கு நடிகைகளில் மிகவும் பிடித்தவர் ஜெனிலியாதான். எந்தவித ஈகோவும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். தற்போது என்னுடைய அண்ணன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறேன்.
இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படம் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன். இப்படத்தில் நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
அவர் ஒரு திறமையான நடிகை. கதையை நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் என்று பேசினார்.
0 comments:
Post a Comment