Thursday 20 March 2014

Leave a Comment

எம்.ஜி.ஆரை புகழ்ந்து சிவாஜி பாடிய பாடல்...!



ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் 'உறுதிமொழி' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

இந்தப்படத்திலேயே 'கிராபிக்ஸ்' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக 'கிழக்கு வாசல்' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

'கிழக்கு வாசல்' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார். 

0 comments:

Post a Comment