குணசித்திர நடிகர் ராஜீவ், நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். ஆனால், நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், சிறிது காலம் ஓட்டலில் வேலை பார்த்தார்.
நடிகர் ராஜீவின் சொந்த ஊர் மதுரை. தந்தை சி.பாலசுப்பிரமணிய முதலியார். தொலைபேசித்துறையில் பணிபுரிந்தார். தாயார் ராஜேஸ்வரி அம்மாள். ராஜீவின் இயற்பெயர் ராஜசேகர்.
சிறுவயதிலேயே நடனத்திலும், பாடல் பாடுவதிலும் திறமை கொண்டவராக ராஜீவ் விளங்கினார். "பி.ï.சி'' வரை பெங்களூரில் வித்யாமந்திர் பள்ளியில் படித்தார். அந்தப்பள்ளியில் நடந்த ஒரு கலைநிகழ்ச்சியில் "இலந்த பழம், இலந்த பழம்'' என்ற பாடலை பெண் குரலில் பாடி பரிசு பெற்றார்.
பள்ளிப்படிப்பை முடித்த ராஜீவ் நடிகராக வேண்டும் என்ற ஆசையால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடிப்பு பயிற்சி எடுக்க முடிவு செய்தார். அதற்காக விண்ணப்பம் அனுப்பினார்.
ஆனால் "கூத்தாடி பிழைப்பு தேவை இல்லை'' என்று கூறி ராஜீவை அவரது தந்தை உதைத்தார். "சகோதரர்கள் அனைவரும் நன்றாக படித்து இருக்கிறார்களே, நீயும் நன்றாக படி'' என்று கூறிப்பார்த்தார். ஆனால் ராஜீவ் பிடிவாதமாக இருந்ததால் நடிப்பு பயிற்சி பெற சம்மதம் தெரிவித்தார்.
நடிப்பு பயிற்சிக்கு வாய்ப்பு பெற பட்டபாடு பற்றி நடிகர் ராஜீவ் கூறியதாவது:-
திரைப்பட பயிற்சிக்கு 50 ஆயிரம்பேர் விண்ணப்பம் அனுப்பினார்கள். அதில் 500 பேரை வரவழைத்து 50 பேரை தேர்வு செய்தனர். அதில் நானும் ஒருவன்.
என்னை அவர்கள் தேர்வு செய்வதற்குள் நான் பட்டபாடு கொஞ்சமல்ல. இயக்குனர்கள் கே.பாலசந்தர், ஸ்ரீதர், திருலோகசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அமர்ந்து இருக்க, நான் நேர்காணலுக்கு சென்றேன்.
நான் சென்றதும் எனது பைலை வாங்கிப் பார்த்து விட்டு, தூக்கி எறிந்தார்கள். "படிப்பதை விட்டுவிட்டு, எதற்காக சினிமாவுக்கு வரஆசைப்படுகிறாய்? பணம், கார் என ஜாலியாக இருக்கலாம் என்றா'' என்று கேட்டார்கள்.
அதற்கு நான் "சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்து இருக்கிறேன். எனக்கு சிறுவயது முதலே நடிக்கவேண்டும் என்று ஆசை!'' என்றேன்.
உடனே நடித்துக்காட்ட சொன்னார்கள். நான் சிவாஜி போல நடித்துக்காட்டினேன். "அப்படியல்ல; உன் ஸ்டைலில் நடி'' என்று கூறினார்கள். நடித்தேன். "உன் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் இப்படி எல்லாம் கடுமையாக நடந்து கொண்டோம்'' என்று பிறகு கூறினார்கள்.
2-ம் ஆண்டு படித்து முடிக்கும்போது, எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்து விட்டது. அதன் பிறகு உடல் மிகவும் மெலிந்து போய் காணப்பட்டேன். எனவே, "சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?'' என்ற பயம் ஏற்பட்டது.
படித்துக்கொண்டு இருக்கும்போது, ஒவ்வொரு வாரமும் ஒரு நடிகரை அழைப்பார்கள். அவர்கள் முன்பு நாங்கள் நடிக்கவேண்டும். அப்படி நடித்தபோது, செல்வம் என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில், "இவர் காமெடி நடிகனாக வருவார்'' என்று என்னைப்பற்றி எழுதினார். அதை பார்த்து நான் அழுதுவிட்டேன். நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தபோது, காமெடி நடிகன் என்று கூறியதை என்னால் தாங்க முடியவில்லை.
இவ்வாறு ராஜீவ் கூறினார்.
நடிப்பு பயிற்சி முடிந்ததும், நடிக்க வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு படக்கம்பெனியாக ஏறி இறங்கினார். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் ஓட்டலில் வெயிட்டராக வேலைக்கு சேர்ந்தார்.
மூன்றரை ஆண்டுகள் அந்த வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு, சமையல்கலை பயிற்சி பெற்றார்.
ஒரு நாள் அங்கு நடந்த ஆண்டுவிழாவில் நடனமாடி முதல் பரிசை பெற்றார். அப்போது அங்கு வேலைபார்ப்பவர்கள் ராஜீவிடம் "சினிமா துறைக்கு சென்றால், மிகவும் பிரகாசிக்கலாம்'' என்று கூறி ஊக்கம் அளித்தனர்.
0 comments:
Post a Comment