ஜூபிடர் சோமுவின் மகன் எம்.எஸ்.காசிவிஸ்வநாதன், மனோகர் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. வசனங்களை எழுதி படத்தை இயக்கியது ஸ்ரீதர். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை. கல்யாண் குமார், தேவிகா, சகஸ்ரநாமம், நம்பியார், நாகேஷ், மனோரமா நடித்திருந்தனர். இப்படக் கதை உருவாவதற்கு ஒரு குட்டி கதை இருக்கிறது.
திருச்சியில் 80 வயதான முதியவர் ஒருவர் இருந்தார். பழங்கால பத்திரிகைகள், நூல்களை பாதுகாத்து வந்தார். அதை அவர் விற்க முன்வந்து, பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார். இதை அறிந்த ஸ்ரீதர், உடனே அந்தப் பெரியவரை தொடர்புகொண்டு பேசினார். அந்த பத்திரிகைகளையும் நூல்களையும் ஸ்ரீதர் விலைக்கு வாங்கினார்.
தனது அலுவலகத்திலுள்ள ஓர் அறையில் அவற்றை பாதுகாத்தார். அதில் ‘சுதேசமித்திரன்’ பத¢திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியைத்தான் ஸ்ரீதர் கதையாக்கி, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என படமாக எடுத்தார். இதில் 120 வயதுடையவராக நம்பியார் நடித்திருப்பார். அவரது மேக்கப் படத்தில் பேசப்பட்டது.
ஸ்ரீதர் வாங்கிய பழைய பத்திரிகைகளால் அவருக்கு கதை மட்டுமல்ல, எனக்கும் மிக முக்கிய தகவல் ஒன்றும் கிடைத்தது. தமிழில் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931ல் ரிலீசானது தெரிந்ததே. அது எந்த தேதியில் திரைக்கு வந்தது என்பது அப்போது யாருக்கும் சரியாக தெரியாமல் இருந்தது. 1931ம் ஆண்டை சேர்ந்த அனைத்து ‘சுதேசமித்திரன்’ இதழ்களையும் எடுத்துப் பார்த்தால் நமக்கு ஏதாவது தகவல் கிடைக்கும் என நம்பினேன்.
அதே போல் ஸ்ரீதரின் அலுவலகத்தில் அமர்ந்து அந்த பணியை ஆரம்பித்தேன். ஜனவரி முதல் அக்டோபர் வரை அனைத்து பேப்பர்களையும் பார்த்தேன். அக்டோபர் 31ம் தேதி பேப்பரில் முதல் பேசும் பட காட்சியை கேளுங்கள் என ‘காளிதாஸ்’ பட விளம்பரம் இருந்தது. இப்போதைய முருகன் டாக்கீசுக்கு அப்போது சினிமா சென்டர் என பெயர். அதில்தான் ‘காளிதாஸ்’ அன்றைய தினம் ரிலீசானது. இந்த தகவல் எனக்கு மகிழ்ச்சியை
தந்தது.
நகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். தனது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் அவரே இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவை நாயகியாக்கினார். இதில் ஹீரோவாக நடித்தது ஆர்.எஸ்.மனோகர். இசை வேதா. படம் முடியும் முன்பே டி.ஆர்.சுந்தரம் காலமானார்.
மீதி படத்தை ஜி.விஸ்வநாதன் இயக்கினார். மனோரமாவை ஹீரோயினாக மக்கள் ஏற்றனர். படமும் ஓடியது. கே.சங்கர் இயக¢கத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த படம் ‘பணத்தோட்டம்’. ஜி.என்.வேலுமணி தயாரித்தார். கதை பி.எஸ்.ராமைய்யா. வசனம் பாசுமணி. இசை எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. வெற்றிப் படம். தெலுங்கிலும் டப் ஆனது.
சிவாஜி, சரோஜா தேவி, தேவிகா நடிப்பில் ஸ்பைடர் பிலிம்சின் முதல் தயாரிப்பு ‘குலமகள் ராதை’. அகிலனின் நாவல் இது. வசனம், இயக்கம் ஏ.பி.நாகராஜன். இசை கே.வி.மகாதேவன். எம்.ஜி.ஆர்., இ.வி.சரோஜா இணைந்து நடித்த படம் ‘கொடுத்து வைத்தவள்’. இ.வி.சரோஜாவின் சொந்தப் படம் இது. வசனங்கள் எழுதி ப.நீலகண்டன் இயக்கினார். கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.
சிவாஜியுடன் பத்மினி, வைஜெயந்திமாலா நடித்த படம் ‘சித்தூர் ராணி’. நாராயணமூர்த்தி இயக்கத்தில் ஸ்ரீதர், இளங்கோவன் வசனங்களை எழுதியிருந்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். யோகானந்த் தயாரித்து இயக்கிய படம் ‘பரிசு’. கதை கொட்டாரக்காரா. வசனம் ஆரூர்தாஸ். இசை கே.வி.மகாதேவன். எம்ஜிஆர், சாவித்திரி நடித்தனர். இந்த படங்கள் அனைத்தும் 1963ல் ரிலீசானது. அதுமட்டுமல்ல, அந்த ஆண்டு தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களை தந்த ஆண்டாகவும் அமைந்தது.
0 comments:
Post a Comment