Monday 24 February 2014

Leave a Comment

சந்திரா - திரை விமர்சனம்...!



நடிகர் : கணேஷ் வெங்கட்ராமன்

நடிகை : ஸ்ரேயா

இயக்குனர் :ரூபா ஐய்யர்

மன்னராட்சி மறைந்த இந்தியாவில், இன்னும், அரசு கவுரவத்தை விட்டுக் கொடுக்காத, ஒரு அரச குடும்பத்து இளவரசியின் காதல் கதை. அதிகாரங்கள் பறிக்கப்பட்ட, இந்திய மன்னர் குருதத்தாவின் (ஸ்ரீநாத்) மகள் இளவரசி சந்திராவதி (ஸ்ரேயா). அவருக்கு, அரச குடும்பத்து மாப்பிள்ளையாக ராஜா தேடிக் கொண்டிருக்க, அவளுக்கோ இசைக்குரு பரமேசுவரனின் (விஜயகுமார்) மகன் சந்திரஹாசன் (பிரேம்) மீது காதல். தந்தையின் கட்டளையை மீற முடியாமல்,

திருமணத்திற்கு சம்மதிக்கும் சந்திராவுக்கு பார்த்த மணமகன், அமெரிக்காவில் வாழும் ராணி சரளாவின் (சுகன்யா) ஒரே மகன், ஆர்யா (கணேஷ் வெங்கட்ராமன்) மகனின் காதலை அறிந்த பரமேசுவரன், அவனிடம் காதலைத் துறக்கச் சொல்லி சத்தியம் வாங்கி விடுகிறார்.

சந்திராவின் காதல் கைகூடியதா?

என்பதை, சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளார், இயக்குனர் ரூபா அய்யர்.

பெண் இயக்குனர் என்றெல்லாம் சமரசம் செய்து கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ரூபாவை மனமாரப் பாராட்டலாம். ஸ்ரேயாவின் கவர்ச்சியை அள்ள அள்ளக் குறையாமல் கவர்ந்து வந்திருக்கிறது.

சாத்தப்பன் நாராயணனின் கேமரா, சபாஷ்! கவுதம் ஸ்ரீவத்சவாவின் இசையில் பாடல்கள் கிளாசிக்கல் ரகம்.

கதையோடு இழைந்தோடும் கானங்கள் காதுக்கு இதம்.

நாயகன் பிரேம், கட்டுமஸ்தான தேகத்தோடு, அசத்தலான நடிப்பைத் தந்துள்ளார். ஸ்ரேயா, வாழைத்தண்டு கால்களுடன், வெண்ணை உடலோடு, சுழன்று ஆடுகிறார்.

வாள் சண்டை போடுகிறார். சோக பாவங்களில், ரசிகர்களை துவண்டு போகச் செய்கிறார். கணேஷ் வெங்கட்ராமன் வழக்கம்போல் கனகச்சிதம், காமெடிக்காக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகளில் பழைய நெடி.

அரண்மனையின் படுக்கையறையில், பிரமாண்ட சங்குகளில் ஒளிரும் மின் விளக்குகள் கற்பனையின் உச்சம். காலணியிலிருந்து உடைகள் வரை துல்லியமாக ராஜ வாழ்வை சித்தரித்திருக்கிறது படம். பாராட்டுக்கள்!

மொத்தத்தில், ”சந்திரா – நளினம்!”

0 comments:

Post a Comment