சினிமாவில் சிலர் பட்டையைக் கிளப்புவார்கள். ஆனால், விருதுகள் என்ற அங்கீகாரம் கிடைக்காமல் ஏதோ ஒரு வகையில் 'அன்ஃபார்ச்சுனேட்’ ஆளுமைகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆட்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரை.
ஹாலிவுட்டின் மோஸ்ட் ஹேண்ட்ஸம் ஹீரோக்களில் ஒருவர் லியானர்டோ டி காப்ரியோ. டைட்டானிக் நாயகனாய் உலகம் முழுவதும் மழலை முகத்தோடு வசீகரித்தவர். இதுவரை 29 படங்களில் நடித்திருக்கிறார். அதில் ரோமியோ ஜூலியட், டைட்டானிக், செலிபிரட்டி, தி பீச், கேட்ச் மீ இஃப் யூ கேன், கேங்ஸ் ஆஃப் நியூயார்க், தி ஏவியேட்டர், தி டிபார்ட்டட், ப்ளட் டயமண்ட், ரெவல்யூஷனரி ரோடு, ஷட்டர் ஐலண்ட், இன்செப்ஷன், ஜே.எட்ஜெர், ஜாங்கோ அன்செயிண்டு, தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் போன்ற படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
தனக்கென பெரும் ரசிக ரசிகைகள் பட்டாளத்தைப் பெற்றிருந்தாலும் விருதுகள் மட்டும் எட்டாக்கனிதான். ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் இரண்டிலும் அதிகம் நாமினேட் செய்யப்பட்ட பாப்புலர் ஹீரோ இவராகத்தான் இருக்கும். ஒரு சக்சஸ்ஃபுல் ஹீரோ இதுவரை ஒருமுறைகூட முக்கியமான விருதுக் கனியை ருசித்ததே இல்லை என்றால் அதை என்னவென்று சொல்வது?
சமீபத்தில் ரிலீஸான மார்டின் ஸ்கார்சிஸியின் 'தி உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்துக்காக பல முக்கிய விருதுகளுக்கான பல்வேறு பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். இதுவும் வழக்கமானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு படத்துக்காகவும் டஜன் கணக்கில் நாமினேட் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் விருதினைத் தவறவிட்டிருப்பார். இம்முறை வெற்றிக்கனியை லவட்டிவிடுவார் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள். அதற்குக் கட்டியம் கூறுவதுபோல் 'காமேஸ்வரன்’ கமலின் மளிகைக்கடை லிஸ்ட் போல் நீளமாக இருக்கிறது இவரின் பரிந்துரைக்கப்பட்ட விருதுகளின் லிஸ்ட்.
லியோவைத் 'தொட்டு’ நடித்த ராசியோ என்னவோ கேட் வின்ஸ்லெட்டும் டைட்டானிக்கில் ஆரம்பித்து குயில்ஸ், ஐரிஸ், எடெர்னல் சன்ஸைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட், ஃபைண்டிங் நெவர்லேண்ட், லிட்டில் சில்ட்ரன், தி ரீடர் மற்றும் ரெவல்யூஷனரி ரோடு போன்ற படங்களுக்காக பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.
பிரபல அமெரிக்க இதழான நியூயார்க், கேட் வின்ஸ்லெட்டை 'இந்தத் தலைமுறை நடிகைகளில் ஆங்கிலத்தை அழகாக உச்சரிப்பவர்’ என்று பட்டமே கொடுத்து கௌரவித்திருக்கிறது. ஆனால் லியோ அளவுக்கு பல்பு வாங்காமல் கோல்டன் குளோபை மூன்று முறை வாங்கி ஆறுதல் அடைந்தவர். ஆனால் பல வெளிநாட்டு விருதுகள் பட்டியலில் நாமினேட் லிஸ்ட்டில் நீங்காத இடம் பிடித்திருந்தாலும் லண்டனின் உயரிய கௌரவமான 'கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ என்ற ராணுவ மரியாதை பெற்றவர். அந்த அளவுக்கு லக்கி பேபிதான் கேட்.
கேரளாவில் ஜெயனைத் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். கப்பல்படை அதிகாரியான ஜெயனுக்குத் தொட்டதெல்லாம் துலங்கியது. 70-களில் ஜெயன்தான் யூத்களின் ரோல் மாடல். அவரின் ஹேர்ஸ்டைல், நடை உடை பாவனைகளை அப்படியே ஃபாலோ செய்தனர். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்குவார்.
டெட் ஸ்லோ படங்களாக வந்துகொண்டிருந்த மலையாள சினிமாவை விறுவிறுப்பு நிறைந்ததாக மாற்றிய ஒரே ஆள் ஜெயன்தான். ஷரபஞ்சாரம், அங்காடி, ஏதோ ஒரு ஸ்வப்னம், தச்சோலி அம்பு, பஞ்சமி, கந்தவளையம் என அவர் படங்கள் ஒவ்வொன்றிலும் வெரைட்டி விருந்து படைத்தார். மாமாங்கம், புதிய வெளிச்சம், கரிம்பனா, சக்கரா மற்றும் கழுக்கன் போன்ற படங்கள் அவரை சூப்பர் ஸ்டாராகவே மாற்றியது. அடிதடி ஆக்ஷன் அத்தியாயத்தை தொடங்கி வைத்தாலும் ஷரபஞ்சாரமும் அங்காடியும் இப்போதும் கமர்ஷியலாகவும் கலைப்படமாகவும் கொண்டாடப்படுகிறது.
1972-ல் வந்தவர் 80-ல் தன் சினிமா கேரியரோடு தன் ஆயுளையும் முடித்துக்கொண்டது பெரும் சோகம். ப்ரூஸ்லீ போல மலையாள சினிமாவில் கலக்கி எடுத்தவரின் விதியும் சினிமா ஸ்டன்ட் காட்சியால் நம் சென்னை சோழவரத்தில் முடிவுக்கு வந்தது.
நவம்பர் 16-ம் தேதி 'கோலிலக்கம்’ படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இவ்வளவுக்கும் டைரக்டர் ஓ.கே பண்ணிய ஷாட்டாக இருந்தாலும் பெர்ஃபெக்ஷனுக்காக 'ஒன் மோர் டேக்’ போய் விபத்தில் உயிரிழந்தார்.
அவரது மரணத்தை வைத்து பல வருடங்கள் சர்ச்சைகள் எழுந்தன. அது திட்டமிடப்பட்ட கொலை என்று சொல்வோரும் உண்டு. அமெரிக்காவில் ஜெயன் ஒற்றைக் கண்ணோடு உயிரோடு இருக்கிறார் என சில வருடங்களுக்கு முன் புரளி கிளம்பியது. 'ஜெயன்டே மரணம் கொலபாதகமோ?’ என்ற புத்தகம் 80-களில் பரபரப்பைக் கிளப்பியது. 'ஜெயன்டே கதா’ என்ற புத்தகமும் வெளியாகி உள்ளது.
இன்று வரை அவரது கதையைப் படமாக்க பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
கொஞ்சம் தமிழ் சினிமா பக்கம் வண்டியை விட்டால் சுதாகர் என்ற நடிகர் டால் அடிக்கிறார். ஆந்திரவாலாவாக இருந்தாலும் கிழக்கே போகும் ரயிலில் சூப்பர்ஹிட் வண்டி ஏறியவர் கல்லுக்குள் ஈரம், இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள் போன்ற படங்களில் யூத்களை பெரிதும் ஈர்த்தார். தமிழில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் பிஸியாக ஹிட் ஹீரோவாக கொடி கட்டிப் பறந்தார்.
600 படங்களுக்கும் மேலான அசுர ஓட்டம் அது. ஆனால் சடாரென எல்லாம் மாறிப்போனது. ஒரு கட்டத்தில் 'மம்மி இவன் என்னை அடிக்கிறான்’ என்ற வில்லன்களின் அரைவேக்காட்டு மகன் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பல படங்களில் உருகி உருகி நடித்தவருக்கு இரண்டு முறை ஆந்திராவின் நந்தி விருது கிடைத்ததைத் தவிர பெரிதாய் விருதுகள் கொடுக்கப்படவில்லை. ஒரு பாப்புலர் ஹீரோ, இளவட்டங்களைக் கிறங்கடித்தவர், காமெடியனாக மாறிப்போனதும்கூட வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்றுதான்!
0 comments:
Post a Comment