சுருட்டு பிடித்த அனுபவம் சந்தோஷமாக இல்லை என்றார் நளினி. கடந்த 1970-80களில் ஹீரோயினாக நடித்தவர் நளினி. தற்போது அம்மா வேடங்களிலும், காமெடி வேடங்கள், டி.வி. சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் 13ம் பக்கம் பார்க்க என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் சூனியக்காரியாக வேடம் ஏற்றிருக்கிறார். இதற்காக ஜடா முடியுடன் கூடிய மேக் அப் அணிந்து பெண் மந்திரவாதி போலவே மாறினார். கூடுதலாக சுருட்டு பிடிக்கும் சுபாவம் கொண்டவராகவும் நடிக்கிறார்.
இக்காட்சியில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:இப்படத்தின் இயக்குனர் புகழ்மணி, எனது கேரக்டர் பற்றி கூறும் போது வித்தியாசமான கதாபாத்திரம் என்று புரிந்தது. நீங்கள் சுருட்டு புகைக்க வேண்டும் என்று சொன்ன போது ஷாக் ஆகிவிட்டேன்.
இப்படியெல்லாம் இதுவரை நடித்ததும் கிடையாது, நிஜ வாழ்க்கையில் புகை பிடிக்கும் பழக்கமும் கிடையாது. அதனால் அக்காட்சியில் நடிக்க தயக்கமாக இருந்தது. கதாபாத்திரத்துக்கு அக்காட்சி முக்கியம் என்று இயக்குனர் வலியுறுத்திய போது ஒப்புக் கொண்டேன்.
முதலில் சுருட்டு பிடிக்கும் போது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. சமாளித்து நடித்தேன். இந்த அனுபவம் எனக்கு சந்தோஷம் தரவில்லை. ஆனாலும் கேரக்டருக்கு தேவைப்பட்டதால் நடித்தேன். ஒரு நடிகையாக எப்படி நடிக்கவும் தயாராக இருக்க வேண்டும். சுருட்டு பிடிப்பதை பார்த்து முழு யூனிட்டாரும் பாராட்டினார்கள். அதுதான் எனக்கு கிடைத்த சந்தோஷம். இது சவாலான வேடம்தான். நன்றாக செய்திருக்கிறோம் என்ற திருப்தி இருக்கிறது. இவ்வாறு நளினி கூறினார்.

0 comments:
Post a Comment