1. 1980 களில் வந்த சினிமாக்களில் ரோஜா பூ கசங்கி கீழே விழுந்தால் ஒரு பெண் கற்பழிக்கப் பட்டாள். அதே இரண்டு ரோஜாக்கள் முட்டிக் கொண்டால் ஒரு படுக்கை அறை காட்சி முடிந்தது.
இன்றும் அந்த படங்களை பார்த்தால் எங்களுக்கு நன்றாகப் புரிகிறது. பிறகு ஏன் நீங்கள் இன்று கற்பழிப்பு, படுக்கையறை காட்சிகளை இப்படி விவரிக்கிறீர்கள். உங்களின் வளர்ந்த தொழிநுட்பமும் நாகரிகமும் இது தானா? இல்லை நாங்கள் மிகவும் தத்துரூபமாக எடுக்கிறோம் என்கிறீர்களா?
2. கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல், ஊரை சுற்றும் இளைஞன் என்றால் அவன் குளிக்கமாட்டானா? 6 மாதங்களுக்கு முடி வெட்டமாட்டானா? ஒரு வாரத்திற்கு மேல் சவரம் செய்ய மாட்டானா?
எதார்த்த படம் என்றால் எதார்த்தத்தை மீறி அல்லவா எதார்த்தமாக காட்டுகிறீர்கள். கிராமத்து இனைஞனின் அழகை அதே அழகோடு காட்ட முயற்சியுங்கள். அவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்.
3. நகைச்சுவை செய்கிறோம் என்று ஏன் இரட்டை அர்த்த வசனங்களையும் கெட்ட கெட்ட வார்த்தைகளையும் பேசி முகம் சுளிக்க வைக்கிறீர்கள்.
4. பெண்களை ஏன் இழிவாகப் பேசுகிறீர்கள்? உங்களை குற்றம் சொல்ல உரிமை இல்லை என்றால் எல்லாப் பெண்களையும் சேர்த்து வைத்து வசனம் பேசும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது.
5. எதற்கு ஒன்றை நாங்கள் ரசித்து விட்டால் தொடர்ந்து அரைத்த மாவையே அரைத்து விட்டு எங்கள் இரசனையை குறை சொல்லி, நீங்கள் இதைத் தான் விரும்புகிறீர்கள் அதனால் நாங்கள் அதைத் தான் எடுக்கிறோம் என்கிறீர்கள்.
( உதாரணம் : கில்லி படத்தில் இடம் பெற்ற அப்படிபோடு பாடல் ஆரம்பித்து வைத்த ஆட்டம் இன்னும் தொடர்கிறது. அதேபாணியில் எத்தனை பாடல்கள் தேவையற்று படங்களில் திணிக்கப்பட்டது என்பது பார்த்தவர்களுக்குத் தெரியும் )
6. எவ்வளவோ செலவு செய்து படம் எடுக்கிறீர்கள். பிறகு ஏன் அரை குறை ஆடையில் பெண்களை காட்டுகிறீர்கள். கதைக்கு தேவை என்ற காரணம் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பெரும்பாலான விடயங்களுக்கு இந்த காரணத்தையே தான் சொல்கிறீர்கள்.
7. தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மனை எங்கள் கண்முன் காட்டினார்கள். உங்களால் இன்றைய தொழிநுட்பம் எதையுமே பயன்படுத்தாமல் அன்றைய காலத்தைப் போல், அதே தரத்துடன் ஒரு வேலுநாச்சியாரை எங்கள் கண்முன் காட்டமுடியுமா?
நீங்கள் காட்டிய பாரதியை நானும் இரசித்தேன். ஆனால் அந்த பாரதியாய் நடிக்கவே உங்களுக்கு ஒரு சாயாஜி சிண்டே தான் கிடைத்தார். தமிழன் ஒருவன் கிடைக்கவில்லை என்பதே என் வேதனை.
8. உறவுகளை கொச்சை படுத்தும் படங்கள் இனி வேண்டாம். அதை தயவு செய்து நிறுத்துங்கள். சமுதாயத்தில் நடப்பதை தான் எடுக்கிறோம் என்று காரணம் சொல்லாதீர்கள். சினிமாவைப் பார்த்து சமுதாயத்தில் நடந்த விடயங்களுக்கு உதாரணம் என்னால் சொல்ல முடியும்.
9. தேவையற்ற இடங்களில் பாடல்களை திணிப்பது, DTs இருக்கிறது என்பதற்காக கண்ட இடங்களில் அலறவைக்கும் BG போட்டு காது வலியை உண்டுசெய்வது என்தைஎல்லாம் நிறுத்துங்கள் . தாங்கமுடியவில்லை.
10. முக்கியமாய் ” நடிகர் நடிகை கட்டி பிடித்தால் பாட்டு, சோக வசனம் சண்டை என்றால் மழை , வாயில் ஒரு குத்து விட்டால் ஒரு பாட்டில் சிகப்பு சாயம்” இதெல்லாம் போதும். முடியல எங்களால.
# நான் நல்ல படங்களை ஆதரிக்கிறேன். அதேபோல் சில தேவையற்ற காட்சிகள், வசனங்கள், பாடல் வரிகளை கடுமையாக எதிர்க்கிறேன். சென்சார் போர்டு என்பதெல்லாம் இங்கு வெறும் பொம்மை நாடகமாகத் தான் இருக்கிறது.
0 comments:
Post a Comment