கோவில் உண்டியலில், காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரிகட்டினால், நாட்டு மக்களுக்கு, உடனடியாக பயன் கிடைக்கும் என, நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக, புதுச்சேரி மாநில வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், ரவி தலைமை தாங்கினர்.
இயக்குனர் ஜெனரல் ஜெய்சங்கர், முதன்மை கமிஷனர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: கடவுளுக்கு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும்.
நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர், வரிகட்டும் போதும் மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர்.
வரியினால், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால், வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்துவோரின் பங்கும் தெரியும் வரும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வருமான வரித்துறை இணை கமிஷனரும், கலை விழா தலைவருமான, ஆறுமுகம், கலை விழா செயலர், ஜெயராகவன் ஆகியோர், நன்றி கூறினர்.
0 comments:
Post a Comment