தமிழ் சினிமாவின் அடிப்படை காதல். காதல் தவிர்த்துப் பிற வகைகளிலும் படம் வந்தாலும் காதலைப் போல வெற்றி பெற்றதும் கொண்டாடப்படுவதும் வேறில்லை. பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல், காதலுக்காக நாக்கைத் துண்டித்துக்கொள்வது என்று தமிழ் சினிமா கண்டுபிடித்த, புதுமைப்படுத்திய பலவகைக் காதல்களில் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட காதல் ஒன்று உண்டு. அது பெண்ணின் காதல்.
எல்லாக் காதல் கதைகளிலும் பெண் இருக்கிறாள். ஆனால் பெண்ணின் காதல் என்று ஒன்று இருக்கிறதா என்றால் தமிழ் சினிமாவில் தேடிப் பார்க்க வேண்டும்.
அறிவாளி என்றொரு தமிழ்ப் படம். 1963இல் வெளியானது. ஷேக்ஸ்பியரின் `டேமிங் ஆஃப் தி ஷ்ரு' நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் `திமிர் பிடித்த' பானுமதியைத் திருமணம் செய்து திருத்துவார் சிவாஜி கணேசன். பெரிய இடத்துப் பெண் படத்தில் இதே வேலையை எம்.ஜி.ஆர். செய்வார். இதற்கு ரஜினி, விஜயகாந்த் என்று பல வாரிசுகள் உள்ளனர். பல படங்களில் நாயகன் பெண்ணைத் துரத்தித் துரத்தியே அவள் மனதை வெல்வான். திருத்துவது அல்லது துரத்துவது என்ற இந்தச் சட்டகத்துக்குள் தமிழ் சினிமாவின் கிட்டத்தட்ட எல்லாக் காதல் கதைகளையும் அடக்கிவிடலாம்.
வெறும் சதைப் பிண்டங்களாகவோ அல்லது நல்வழிப்படுத்தப்பட வேண்டியவர்களாகவோ மட்டுமே பெண்களையும் அதற்கான கருவிகளாக மட்டுமே காதலையும் பயன்படுத்திவரும் தமிழ் சினிமாவில் அபூர்வமான சில விதிவிலக்குகளும் உண்டு. பாடல்களில் இந்த விதிவிலக்குகள் அதிகமாகவே உண்டு.
`கங்கைக்கரைத் தோட்டம்’ தொடங்கி `மாலையில் யாரோ’ மற்றும் மிக சமீபத்தில் `சற்று முன்பு பார்த்த `மேகம் மாறிப்போக’ போன்ற பல பாடல்கள் பெண்ணின் அகவுணர்வை அதன் தீவிரத்தன்மையுடன், அழகியலுடன் எடுத்துவைப்பவை. பாடல்களில் பெண்ணின் அகவுணர்வைப் பேச முன்வந்த இயக்குநர்கள் அதைக் கதையோட்டத்துடன் காட்சிப்படுத்தாமல் விடுவதற்கான காரணங்களை அறிய பெரிய அளவில் மெனக்கிட வேண்டியதில்லை. பெண்கள் மிக அபூர்வமாகவே பங்குகொள்ளும் ஒரு கலை வடிவம் பெண்ணின் அகவுணர்வை முன் வைக்காமல் இருப்பதும், ‘கலாச்சாரத் தீவிரவாதத்திற்குப் பல சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும் ஒரு துறை, பெண்ணின் அகவுணர்விற்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதும் எதிர்பார்க்கக்கூடியதே
`ஆட்டோகிராப்’ சேரன்போல ஒரு பெண் தனது பல பருவத்துக் காதல்களைத் திரும்பிப் பார்க்கும் ஒரு படம் வந்தாலோ, `தீராத விளையாட்டுப் பிள்ளை’ விஷால்போல மூன்று பேரைக் காதலித்து (டெஸ்ட் வைத்து) அதில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண்ணைப் பற்றிய திரைப்படம் வந்தாலோ தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்வினையாற்றும் என்பது யூகிக்கக்கூடியதே. இன்னமும்கூடத் தமிழ்த் திரைப்படம் ஒரு பெண்ணுக்குக் காதல் துவங்குவதற்கான சரியான புள்ளியைக் கண்டடையவில்லை என்பதுதான் பிரச்சினை.
ஒருவன் சமூக விரோதியாக இருந்தாலும்கூடத் தன்னை ரௌடிகளிடமிருந்து அவன் காப்பாற்றுவது ஒரு பெண்ணிற்கு அவனைக் காதலிக்கப் போதுமான காரணமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்குத் தன் பின்னால் ஒருவன் சுற்றுவதும்கூடக் காதலிக்க ஏற்ற ஒரு காரணம்.
காதலுணர்வைக் கொச்சைப்படுத்தும் இது போன்ற திரைப்படங்கள் மலிந்த ஒரு காலகட்டத்தில் முழுக் கதையோட்டத்தில் இல்லாவிட்டாலும் பெண்ணின் அகவுணர்வைக் காட்சி மொழியில் அழகாக வைத்த சில இயக்குநர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
பாசத்திற்கும் காதலுக்குமிடையிலான போராட்டத்தின் வலியை உடல் மொழியின் மூலமாகவே பார்வையாளருக்குக் கடத்திய `முள்ளும் மலரும்' ஷோபா, தனது இசை மீது தீவிரமான ரசனை கொண்டவன் தனது காதலை நிராகரிக்கும்போது அந்த வலியை சோபாவில் உட்கார்ந்துகொண்டிருக்கும் விதம் மூலமாக வெளிப்படுத்தும் ஜானி தேவி என்று மென்னுணர்வு ததும்ப வலம் வந்தவர்கள் இயக்குநர் மகேந்திரனின் பெண்கள்.
திருமணத்தோடு காதலைப் பூர்த்தி செய்யும் தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய மணிரத்தினத்தின் அலை பாயுதே, பெண்ணின் கோணத்திலும் காதலைச் சொன்ன அபூர்வமான படங்களில் ஒன்று.
அதுபோலவே, கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களும் பெண்ணின் அகவுணர்வுக்கு, அதன் போராட்டங்களுக்கு ஓரளவிற்கு முக்கியத்துவம் அளித்த படங்கள். பெண்ணைக் காதலிக்கத் தூண்டும் புள்ளி, அதில் நேரும் குழப்பங்கள் போன்றவற்றை முழுமையாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்ச நேர்மையோடு இந்தப் படங்கள் பதிவு செய்ய முயற்சித்தன என்பது இந்தப் படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டிக் கவனிக்க வேண்டிய விஷயம்.
முழுக்க முழுக்கப் பெண்ணின் கண்ணோட்டத்தில் காதலைச் சித்தரித்த படம் என்று சசி இயக்கிய ‘பூ’ படத்தைச் சொல்லலாம். இதில் காட்டப்பட்ட அளவுக்கு ஆழமாகப் பெண்ணின் காதல் வேறெந்தப் படத்திலும் காட்டப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் காதலைத் தவிரச் செய்வதற்குப் பல விஷயங்கள் கொண்ட, சுயம் பற்றிய பிரக்ஞை உள்ள ஒரு பெண்ணுக்குக் காதல் என்பது சாத்தியமா? பெண்ணியவாதிகளால் பெரிதும் கொண்டாடப்படும், அந்தக் கொண்டாட்டத்திற்குத் தகுதியான படம், அவள் அப்படித்தான். படத்தில் ப்ரியாவிற்குக் காதல் அனுபவங்கள் உண்டு. ஆனால் காதல் இல்லை.
தமிழ் சினிமாவில் பெண்களைப் பொறுத்தவரையில் காதலிப்பதற்கும் குறைந்தபட்ச தகுதி வேண்டும் போலிருக்கிறது.
0 comments:
Post a Comment