சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் ஹைகோர்ட்டு நுழைவு வாயில் அருகே ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் குணமடைய வேண்டும் என்று இந்த கோவில் கட்டப்பட்டது.இந்த கோவில் நடைபாதையில் உள்ளதாகவும், இதை இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட்டு இந்த கோவிலை இடிப்பதற்கு சென்னை மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த கோவில் இடிக்கப்படவில்லை.இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னி ஹோத்ரி, கே.கே.சசிதரண் ஆகியோர் கோவிலை புதன்கிழமை (இன்று) மதியம் 2 மணிக்குள் இடிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து தமிழக அட்வகேட் ஜெனரல் சோமயாஜி இன்று நீதிபதிகள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பொது இடங்களில் உள்ள கோவில் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் இந்த கோவிலை இடிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கோவிலை இடிக்க வேண்டும் என்கிற தங்களது உத்தரவை அமுல்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
இன்று வழங்கிய தீர்ப்பில்,”பொது சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதை மட்டும்தான் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். அது இந்து கோயிலா, முஸ்லிம் மசூதியா, கிறிஸ்தவ ஆலயமா என்பதை பற்றி கவலை இல்லை. பொது சாலைகளை ஆக்கிரமித்து சமய கட்டடங்களை கட்டுவதை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ள முடியாது. வழிபாடு நடத்த விரும்புபவர்கள் தனியார் நிலத்தில் அதை நிறுவலாம்.பொது சாலை, பொது மக்களுக்காகத்தான்.
அது வியாபாரம் செய்யவோ அல்லது சமயக் கட்டடங்களைக் கட்டுவதற்கோ இல்லை. பொது சொத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதற்கு உரிமை இல்லை. சாலையோரத்தில் கோயில் கட்டுவதற்கு எந்த ஒரு அனுமதியும் அவர் பெறவில்லை.அதனால், பொது சொத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயிலை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. அவ்வாறு கோயிலை அகற்றும்போது அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பை மநாகர போலீஸ் ஆணையர் வழங்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment