இந்தி இளம் நாயகி அனுஷ்கா சர்மா, தான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமல்ல, பேச்சிலும் அதிரடி, சரவெடி!
எடக்குமடக்கான எந்தக் கேள்விக்கும் தயங்காமல் பதில் சிக்சர்களை விளாசுகிறார்...
நீங்கள் திரையுலகுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகின்றன. உச்சி இடத்தை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன?
முன்பைப் போலவே நான் இப்போதும் நேரடியாகவே பேசுபவளாகவும், நேர்மையானவளாகவும் இருக்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப சாமர்த்தியமாகப் பேச எனக்குத் தெரியாது. பொய் சொல்லும் திறமையும் இல்லை.
அப்படியானால் நீங்கள் மனோரீதியாக வளர்ந்திருக்கிறீர்கள் அல்லவா?
ஆமாம். நான் முதிர்ச்சி அடைந்திருக்கிறேன். சினிமா தொழிலை என்னால் சிறப்பாக கிரகித்துக்கொள்ள முடிகிறது. கதைகளை நான் புரிந்துகொள்ளும் திறனும் வளர்ந்திருக்கிறது. மற்றபடி நான் எப்போதும் போல அடக்கமாகவே இருக்கிறேன். அது எனக்குக் கை கொடுக்கிறது.
உங்களை ரண்பீருடன் இணைத்து வரும் கிசுகிசு பற்றி?
அவருடன் எந்தப் பெண்ணைத்தான் இணைத்துக் கூறவில்லை! அவர் என்றாலே அப்படி அமைந்துவிடுகிறது. நாம் நமது நட்பை எல்லோரிடமும் நிரூபிக்க வேண்டும் என்பது சோகமான விஷயம். எனக்கும் ரண்பீருக்கும் காதல் என்பது எரிச்சலூட்டும் கற்பனை. அப்படிப்பட்ட உறவில் இணைய எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு மாதிரியானவர்கள். அதனால்தான் எங்களால் நல்ல நண்பர்களாய் இருக்க முடிகிறதோ என்னவோ!
விராட் கோலி உங்கள் வாழ்க்கையில் இடையில் வந்ததால் ஏதேனும் பிரச்சினையா?
எங்கள் இருவரையும் பற்றி வெளி வந்த தகவல்கள் எல்லாம் உண்மையில்லை. கோலி என் வீட்டுக்கு வந்தாரா என்று நீங்கள் கேட்டால், ஆம் என்று பதில் சொல்வேன். அவர் எனது நண்பரா? என்று கேட்டால் அதற்கும் அதுதான் பதில். எனக்கு அவரைத் தெரியும். ஆனால் மக்களுக்குத் தெரியாத வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. நாங்கள் ஒரு விளம்பரப் படத்தில் சேர்ந்து நடித்தோம். அவர் மிகவும் திமிரானவர் என்று கூறப்படுவதால் நானும் அப்படியே நடந்துகொள்ளத் தீர்மானித்தேன். எனது கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கோலியைச் சந்தித்தபோது, அவர் மிகவும் எளிதாகப் பழகுகிறவராக, புத்திசாலியாக, ஜாலியானவராக இருந்தார். அந்த விளம்பரப் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடந்தது. இரண்டாம் நாள் இரவில், நான் புது வீடு கட்டியிருப்பதால் நண்பர்களை விருந்துக்கு அழைத்தேன். அப்படித்தான் கோலியையும் கூப்பிட்டேன். அங்கிருந்து வதந்திகள் புறப்பட்டுவிட்டன. வேறு பலரும் விருந்துக்கு வந்திருந்தார்கள் என்றாலும், அதெல்லாம் செய்தியாகவில்லை.
உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு விஷயம்?
30 நாட்களே ஆன எனது பொமரேனியன் நாய்க்குட்டி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. கட்டுப்பாடில்லாத அன்பு எது என்பதை நான் முதன்முதலாக அதன் மூலமாகத்தான் உணருகிறேன். நேற்றிரவு நான் தூங்கவேயில்லை. அந்த நாய்க்குட்டி தூங்கியபிறகுதான் அதிகாலையில் தூங்கினேன். தாய்மை என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. கடைசியாக அந்தக் குட்டி எப்போது சாப்பிட்டது என்று எனக்குத் தெரியும். நாங்கள் நேற்றுத்தான் அதை வாங்கிவந்தோம். எனவேதான் அதனால் தனது தாயைப் பிரிந்து உறங்க முடியவில்லை. நான் அதற்காக தரையிலேயே உட்கார்ந்துகொண்டேன். என் கையிலேயே அது உறங்கிவிட்டது. அந்த நாய்க்குட்டி என்னை மகிழ்ச்சியாக்குகிறது.
நீங்கள் எளிதாக காதல் வசப்படும் பெண்ணா?
‘ரொமான்டிக்’கானவர் என்றால் என்ன? அன்புதானே! எனக்கு முக்கியமான விஷயம் அன்புதான். ஆனால் நான் எனது உணர்வுகளை அப்படியே வெளிக்காட்டுவதில்லை. நான் திரும்பத் திரும்ப பலமுறை, ‘ஐ லவ் யூ’ சொல்லமாட்டேன். என்றாலும், என்னிடமும் நிறைய காதல் உணர்வு பொங்குகிறது. எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். ஒரு இளைஞன் எனது அழகைப் புகழ்ந்தாலும் நான் சங்கடப்பட்டு, உடனடியாக வேறு விஷயத்துக்கு மாறிவிடுவேன்.
உங்களைப் பொறுத்தவரை காதல் உணர்வை எப்படி கொண்டாடுவீர்கள்?
என்னைப் பொறுத்தவரை அநேகமாக, ஜோடியாக ஒரு படம் பார்ப்பேன். பிடித்த நபரோடு பொழுதுபோக்குவேன். மற்றபடி, பூக்கள், சாக்லேட்கள் எல்லாம் மூடநம்பிக்கை.
திருமணம் செய்து ஒன்றாக வாழ்வது, திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்வது இந்த இரண்டில் எது உங்கள் விருப்பம்?
திருமணம்தான் என் விருப்பம். திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழும் வாழ்க்கை பற்றி எனக்கு சரியான புரிதல் இல்லை. நான் யாருடனும் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அப்படி சேர்ந்து வாழ விரும்பினால் அது குழந்தைக்காகத்தான் இருக்கும். அது, திருமணத்தில்தான் நடக்கும்.
உங்களின் குழந்தைப் பருவக் காதல்?
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்டது. அப்போது, அர்ஜூன் என்றொரு பையன் இருந்தான். அவன் எனக்கு அழகாகவும், இனிமையாகவும் தோன்றினான். அதனால் அவன் மீது ஆசைப்பட்டேன்.
யாராவது உங்களிடம் காதலைச் சொல்லியிருக்கிறாரா?
சொல்லியிருக்கிறார்கள்!
ஆணிடம் நீங்கள் விரும்புவது எது, வெறுப்பது எது?
வாசம்தான். ஆணிடம் இருந்து வீசும் வாசம் என்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல வாசம் வந்தால் நான் திரும்பிப்பார்ப்பேன். அதேவேளையில் சுவாசத்தில் துர்நாற்றம், உடலில் இருந்து எழும் கெட்ட வாசனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
உங்கள் இதயம் மற்றவர்களால் காயப்படுத்தப்பட்டிருக்கிறதா?
ஆமாம்.
அந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பீர்கள்?
காலம் எல்லாவற்றையும் குணப்படுத்திவிடும். காயப்படும்போது வலி உருவாகுவது இயல்பு!
அன்புக்காக நீங்கள் கொலையும் செய்வீர்களா?
யாருக்காக என்பதைப் பொறுத்தது அது. எனது குழந்தைக்காக என்றால், நிச்சயம் செய்வேன். ஒரு கொலைகாரன், எனது அன்புக்குரியவரைச் சுட்டால், நான் திருப்பி அவனைச் சுடுவேன். இது நூறு சதவீதம் நிச்சயம்!
உங்களின் சொந்த வாழ்க்கை ஏன் இப்படி கிசுகிசுவாக பரவுகிறது?
எவரும், யாருடனும் அப்படியே ‘டேட்டிங்’ கிளம்பிப் போய்விட முடியாது. அவர் மீது கொஞ்சமாவது ஆர்வம் ஏற்பட வேண்டும். அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை தோன்றவேண்டும். ஒருவரை ஒருமுறை சந்தித்ததற்கு ஊரெங்கும் ஓலமிடுகிறார்கள். அதுதான் வருத்தமாயிருக்கிறது. நாம் நாமாக இருப்பதற்கு இந்த உலகம் அனுமதிப்பதில்லை.
0 comments:
Post a Comment