கோவை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறை சார்பில் சரித்திரா–2014 என்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:–
நான் இந்த கல்லூரியில் படித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். நானும், மறைந்த இயக்குனர் மணிவண்ணனும் இந்த கல்லூரியில் படிப்பதற்காக ஒன்றாக வந்து விண்ணப்பம் வாங்கி சேர்ந்தோம். நான் தாவரவியல் துறையில் சேர்ந்தேன். அவர் முதன்மை ஆங்கிலத்துறையில் சேர்ந்தார். பாடம் மிகவும் கடினமாக இருந்ததால் மணிவண்ணன் சென்னை சென்று சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
அதனால்தான் என்னவோ என்னை வைத்து 25–க்கும் மேற்பட்ட சினிமாவை இயக்கினார். அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. எனக்கு படிப்பு வரவில்லை. சினிமாவுக்குள் நுழைந்ததால் தப்பித்தேன். இல்லாவிட்டால் என்னுடைய நிலைமை என்னவாகியிருக்கும்? என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
நான் இந்த கல்லூரியில் படித்தபோது தான் எனக்குள் பகுத்தறிவு சிந்தனை உருவானது. அதாவது ஒரு இடத்தில் உள்ள சுவரில் கருத்தரிக்க அரச மரத்தை சுற்றவேண்டும் என்றால் கருத்தடைக்கு எந்த மரத்தை சுற்றுவது? என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அதன்பின்னர் பெரியாரின் கொள்கைகள் என்னை மிகவும் ஈர்த்தது. எனக்குள் பகுத்தறிவு சிந்தனையும் அதிகரித்தது.
அந்த காலத்தை விட தற்போதைய நவீன உலகம் சிறப்பாக உள்ளது. நாங்கள் படித்த காலத்தில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஆனால் இப்போது படிப்புக்கு ஏற்ற வேலை, நல்ல சம்பளத்துடன் கிடைக்கிறது.
படித்தவர்களுக்கு ஏராளமான புதிய புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இன்றைய தலைமுறையினர் மிகுந்த புத்திசாலிகள், அறிவாளிகள்.
இதனால் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டியதில்லை. நாம்தான் அவர்களிடம் அறிவுரை கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இளைஞர்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே படிப்பு மட்டுமல்லாமல் பெரியார், அம்பேத்கார், கார்ல் மார்க்ஸ் போன்ற பெரியவர்களின் வழியை பின்பற்றி நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
0 comments:
Post a Comment