நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்திருக்கிறார் ரம்யா. வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. கன்னட படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர் திடீரென்று அரசியலில் குதித்தார். தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகவும் தேர்வானார்.
இதையடுத்து அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று சான்டல்வுட்டில் பேசப்பட்டது. ஆனால் அவர் அதுபற்றி எதுவும் சொல்லாமல் மீண்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று பெங்களூரில் நடந்த கர்நாடக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
சஞ்சு வெட்ஸ் கீதா என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது பெற்றார் ரம்யா. பின்னர் ரம்யா பேசியதாவது: ஒவ்வொரு வருடம் விருது அறிவிப்பதற்கு முன்பும் நான் சிறந்த நடிகை விருது பெறுவேன் என்று என் தந்தை நம்பிக்கையாக இருப்பார். ஆனால் அது நழுவிப்போய்க்கொண்டே இருந்தது. அவரது ஆசை அவர் மறைவுக்கு பிறகுதான் நடந்திருக்கிறது. தற்போது அந்த விருது கிடைத்திருக்கிறது. நான் விருது பெறும் இக்காட்சியை அவர் பார்க்க முடியவில்லையே என்று எண்ணும்போது துக்கம் நெஞ்சை அடைக்கிறது.
எதிர்காலத்தில் இன்னொரு முறை சிறந்த நடிகை விருது பெறுவேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நடிப்புக்காக இதுதான் நான் பெறும் முதல் மற்றும் கடைசி விருது. இதை எனது தந்தைக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்றார். இவ்வாறு ரம்யா கூறியபோது அவரது கண்கள் கலங்கின. சினிமாவுக்கு முழுக்கு போடுவதை பற்றித்தான் அவர் சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment