‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் படவுலகில் அறிமுகமான நஸ்ரியாவுக்கும், பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், இளம் நடிகரான பகத்பாசிலுக்கும் திருமணம் செய்ய பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று பகல் 12.30 மணிக்கு திருவனந்தபுரம் தாஜ் ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நஸ்ரியா–பகத் பாசிலின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
நிச்சயதார்த்திற்கு பிறகு நஸ்ரியாவும், பகத்பாசிலும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நஸ்ரியா கூறும்போது, எங்கள் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் 21–ந்தேதி திருவனந்தபுரம் கழக்கூட்டம் அல்தாஜ் அரங்கில் திருமணம் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து 24–ந்தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளோம். எந்த இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்யவில்லை. திருமணத்திற்கு பிறகு என் கணவர் வீட்டாரும், எனது பெற்றோரும் சம்மதித்ததால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.
எனக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் அனைவரும் சம்மதித்ததால் மட்டும் தொடர்ந்து நடிப்பேன். அதே சமயம் சிறந்த முறையில் எனது குடும்பத்தை நான் பார்த்துக் கொள்வேன் என்றார்.
நடிகர் பகத்பாசில் கூறும்போது, 'பெங்களூர் டேஸ்' என்ற படத்தில் நாங்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்தோம். முதல் பார்வையிலேயே நஸ்ரியா மீது எனக்கு காதல் வந்து விட்டது. அதன் பிறகு நாங்கள் போனில் பேசி எங்கள் காதலை வளர்த்துக் கொண்டோம். தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்றார்.

0 comments:
Post a Comment