Tuesday 18 February 2014

Leave a Comment

நம்ம சீயானுக்கு சீயான் இருக்கிறார் தெரியுமா..?



‘ஐ’ படத்துக்காக பல கிலோக்கள் எடை குறைந்த சீயானுக்கே சீயான் ஒருவர் ஹாலிவுட்டில் இருக்கிறார் தெரியுமா? சொல்லப்போனால், சீயானுக்கே இந்த உடல் குறைப்பு மேட்டரில் சார்தான் ரோல்மாடல். இதுவரை உடல் எடை கூட்டியும் குறைத்தும் இவர் அளவுக்கு யாரும் ரிஸ்க் எடுத்தது இல்லை என அகில உலக அளவில் கொண்டாடப்படுகிறார். அவர், 40 வயதான கிறிஸ்டியன் பேல்.

சர்க்கஸ் வீரரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஏழை அம்மாவுக்கும் தென் ஆப்பிரிக்காவில் கமர்ஷியல் பைலட்டாக இருந்த தந்தைக்கும் மகனாகப் பிறந்தவர். 16 வயதோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு டி.வி விளம்பரங்களில் நடித்தவர், 13-வது வயதிலேயே மோதிரக் கையால் குட்டு வாங்கி விட்டார். ஆம். 1987-ல் தன் ‘எம்பயர் ஆஃப் தி சன்’ (Empire of the Sun) படத்தில் வாய்ப்புக் கொடுத்தது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய முகாமில் மாட்டித் தவிக்கும் இளைஞனாக நடிப்பில் மிரட்டியிருந்தார். உடனே வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தது 2000-ம் ஆண்டில் பேட்ரிக் பேட்மேன் இயக்கத்தில் நடித்த ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) படம்தான். சைக்காலஜிகல் த்ரில்லர் படமான ‘அமெரிக்கன் சைக்கோ’ இவருடைய நடிப்பில் புதுப் பரிமாணத்தை வெளிக்காட்டியது.

அதன் பிறகு 2004-ல் ‘தி மெஷினிஸ்ட்’ (The Machinist) என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக கேரக்டருக்காக மெனக்கெடும் ‘மெத்தட் ஆக்டர்’ என்ற பட்டம் கிடைத்தது. ஏனென்றால் 63 பவுண்டுகள், அதாவது 28 கிலோ எடையைக் குறைத்தார். 55 கிலோவுக்கும் குறைவாக எடை இருந்ததால், ஆளே பார்க்க எலும்புக்கூடாகக் காட்சி அளித்தார்.

இன்சோம்னியாவால் பீடிக்கப்பட்டு வேலை இழந்த ஒரு தொழிலாளியின் கதை என்பதால், கேரக்டராகவே மாறிப்போய் பார்க்கவே பரிதாபமாக இருந்தார். அது மட்டுமல்ல. உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வந்த அகில உலக பாப்புலர் பேட்மேன் படங்களான பேட் மேன் பிகின்ஸ்(Batman Begins) (2005), தி டார்க் நைட்(The Dark Knight)(2008), தி டார்க் நைட் ரைஸஸ் (The Dark Knight Rises) (2012)படங்களில் ‘மெக்கோ’ உடற்கட்டோடு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து மிரட்டி இருந்தார்.

2010-ல் ரிலீஸான ‘தி ஃபைட்டர்’ படத்தில் மீண்டும் 86 கிலோவிலிருந்து 66 கிலோவுக்குத் தன் எடையைக் குறைத்தார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே அப்படியே ஆளே மாறி வந்து நிற்பார். 2012-ல் ‘தி டார்க்நைட் ரைஸஸ்’ படத்தில் 90 கிலோவுடன் செம மேன்லியாக நடித்து இருந்தார். 2013 டிசம்பரில் ரிலீஸான, ‘அமெரிக்கன் ஹஸில்’ படத்தில் சற்று உடல் வெயிட் போட்டுத் தொப்பை ஆசாமியாக மாறி இருக்கிறார். 10 அகாடமி அவார்டுக்காக அந்தப் படம் நாமினேட் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 43 பவுண்டுகள் தன் எடையை ஏற்றியிருக்கிறார். செயற்கையாகக் கொஞ்சம் உடலைப் பின்புறமாக வளைத்து மூன்று இஞ்ச்கள் உடல் உயரத்தையும் கம்மியாக்கி ஆளே மாறிவிட்டார்.

முதல் நாள் ஷூட்டிங் போனவரை பிரபல நடிகர் ராபர்ட் டி நீரோவிடம் படத்தின் இயக்குநர் அறிமுகப்படுத்திவைத்தபோது, ‘யார் இந்த மனிதர்?’ என்று கேட்டவர், பின்பு உண்மை தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

விருதுகள் காத்திருக்கின்றன தல..!

0 comments:

Post a Comment