கஹானி படத்தின் தமிழ் ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடித்த மறுத்ததாக வந்த செய்திகள் உண்மையல்ல என படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா தெரிவித்தார். தெலுங்கின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் சேகர் கம்முலா.
கோதாவரி, லீடர், ஹேப்பி டேஸ் என இவரது அத்தனைப் படங்களும் பெரும் வெற்றி பெற்றவை. முதல் முறையாக இப்போது அவர் ஒரு நேரடி தமிழ்ப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் தெலுங்கிலும் தயாராகிறது. இந்தியில் பெரும் வெற்றி பெற்ற கஹானி படம்தான் அது. தெலுங்குப் படத்துக்கு அனாமிகா என்று தலைப்பிட்டுள்ளனர்.
ஒரிஜினல் படத்தில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இதன் ரீமேக்கில் நடிக்கும் நயன்தாராவோ, திருமணமான பெண்ணாக மட்டும் நடித்துள்ளார். வித்யாபாலன் போல் கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்ததாகவும் எனவே கதை மற்றும் கேரக்டரில் இயக்குநர் மாற்றம் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.
நேற்று சென்னையில் நீ எங்கே என் அன்பே படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக முதல் முறையாக சென்னை வந்த இயக்குநர் சேகர் கம்முலாவிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
"கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என்றும் கதையை மாற்றும் படியும் நயன்தாரா என்னை நிர்ப்பந்தித்ததாக வெளியான செய்திகள் வதந்திதான். வித்யாபாலன் இந்தியில் கர்ப்பிணியாக நடித்த கேரக்டரை தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நான்தான் மாற்றினேன்.
நயன்தாராவை அணுகி கதை சொன்ன போதே அவர் கர்ப்பிணியாக இல்லாமல் அமெரிக்காவில் இருந்து பழைய ஹைதராபாத்துக்கு தனது கணவனை தேடி வரும் ஒரு பெண் கேரக்டர் என்று விவரித்தேன். பெண் வலிமையானவள் என்பதை காட்டுவதற்காகவே கதையை உருவாக்கினேன்.
ஒரு கர்ப்பிணிப் பெண் கணவனைத் தொலைத்துவிட்டாள் என்று கூறும்போது எளிதில் அனுதாபம் கிட்டும். ஆனால் அதில் என்ன சவால் இருக்கிறது? அதனால்தான் கதையை மாற்றினேன். கதையின் மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டேன். மற்றபடி ஒரிஜினலுக்கும் இந்தக் கதைக்கும் நிறைய மாறுதல்கள் இருக்கும்.
நயன்தாரா பிரமாதமாக நடித்துள்ளார். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அவர் நடிப்புக்கு ஈடில்லை. இந்தப் படத்தின் இசை ஒரு கூடுதல் பலம். அது பற்றி நான் இசை வெளியீட்டு விழாவில் சொல்கிறேன்,' என்றார்.
0 comments:
Post a Comment