நமது சினிமாவில் எது நல்ல அம்சம், எது அப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருந்ததில்தான் பாலுமகேந்திராவின் மேதமை அடங்கியிருந்தது.
புத்திசாலிகள் நிறைந்த ஊரில், அறிவும் ஞானமும் பெற்ற மனிதர் அதிகப் பயனுள்ளவராக இருப்பார். பாலுமகேந்திரா படித்தவர். அதனாலேயே எங்களுக்குச் சினிமா அறிவு இருக்க வில்லை என்று சொல்லிவிட முடியாது. புதிய ஊடகமாக சினிமா வடிவம் இருந்ததால், நாடகம் மற்றும் இலக்கியத்திலிருந்து பெற்றிருந்த முன் அனுபவத்தை சினிமா என்ற முற்றிலுமான புதிய ஊடகத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்தப் புதிய ஊடகத்துக்கு வேறு வகையான கவர்ச்சி இருந்தது.
சினிமாவின் இலக்கணத்தை ஒவ்வொருவரும் அவரவர் துணிகரத்தில், இழப்பில்தான் கற்றுக்கொண்டார்கள் - சில நேரங்களில் மற்றவரின் இழப்பிலும். தமிழ் சினிமாவில் சாதனையாளர்களாக அப்போது இருந்தவர்கள் அனைவரும், கடும் உழைப்பின் வழியாகவே தங் களை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்போது குருகுலம் போன்ற பயிற்சி முறை இருந்தது. நாங்களும் அதை பின்பற்றினோம்.
பாலுவும் அவரது நண்பர்களும் புனே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பள்ளியில் படித்து வந்தவர்கள். இந்திய சினிமா புதிய காற்றைச் சுவாசித்தது மட்டுமின்றி, அந்தக் காற்று இந்தியச் சினிமாவையே மாற்றியது. அப்போ திருந்த சினிமா தொழில்துறை தங்களுக்குத் தகுதியானதல்ல என்று பாலுவின் தலைமுறை மாண வர்களில் சிலர் நினைத்தார்கள். ஏனெனில், அவர்கள் சர்வதேசத் தரத்திற்குப் பயிற்சிபெற்றவர்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டார்கள்.
அவர்களில் ஒருவர் அல்ல பாலுமகேந்திரா. அவருக்குத் தமிழராக இருப்பதில் பெருமை இருந்தது. தமிழ் சினிமாவைக் கேலி செய்யாமல், தனது நன்றியறிதலைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
நன்கு படித்த ஒரு மனிதன், கிராமத் துக்குத் திரும்புவதை போல அவர் திரும்பினார். அவருக்கு எந்த அம்சம் வலுவானது, எது தவறானது என்பது முழுமையாகத் தெரிந்திருந்தது. அவரது கணிப்பு சரியாகவும் இருந்தது. அப்படித் தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.
வித்தியாசமான பாணி
நாங்கள் பிரபலமாக ஆவதற்கு முன்பே, மிகுந்த தன்னம்பிக்கை உள்ள இளைஞனாக அவரைப் பார்த்து ஆச்சரியம் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. "யார் இந்த ஆள்? இவரது எழுத்து நடையே வித்தியாசமாக உள்ளது" என்று கேட்டிருக்கிறேன். அவர் சம்பிரதாயமான முறையில் வேலை செய்யவில்லை.
ஷாட்களுக்கு அவர் ஒளியூட்டும் முறை எனக்கு மிகவும் பிடித்தமானது. புகழ்பெற்ற இயக்குநர் ராமு காரியத்துடன் பணியாற்றப் போகிறார் என்று என்னிடம் கூறப்பட்டது. அத்துடன் சேதுமாதவனோடு சேர்ந்து பணிபுரியலாம் என்றும் சொன்னார்கள்.
இயக்குனர் சுகதேவ் அலுவாலியா போன்றவர்கள், அவரது செட்டுக்கு வருவதைப் பார்த்து நான் ஆச்சரியமடைந் திருக்கிறேன். சுகதேவ் எனக்கு ஹீரோவைப் போன்றவர். அவரது விளம்பரப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். தனிப் பாணி கொண்டவை அவை. பாலுவுக்கு எப்படியான சகாக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். நானும் அவரது நண்பனாக மாறிவிட்டேன்.
பாலு முதலில் ஒரு படத்தை இயக்க விரும்பியபோது, நான்தான் ஹீரோ என்று சொன்னார். வெறும் நட்பார்ந்த உறுதிமொழியாக அதைச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், கோகிலா படம் எடுத்தபோது அவர் வார்த்தையை நிரூபித்தார்.
நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்த கனவு நனவானது. நாங்கள் அணியாகச் சேர்ந்து வேலையும் செய்தோம். நான் நடித்த பல படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.
நாங்கள் தொடர்ந்து சந்தித்தோம். சினிமா பற்றிப் பேசினோம். கிசுகிசுவாகக்கூட ஒரு படம் ஏன் கிளாசிக்காக ஆகவில்லை என்பதைத்தான் பேசுவோம். தனிப்பட்ட நபர்களைப் பற்றிப் பேசியதே இல்லை.
நிறைய நினைவுகள்
அவருடன் சேர்ந்து பல நினைவுகள் எனக்கு உண்டு. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி விழும் இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நீந்திக் குளிப்போம். அருவியின் குறுக்காக யார் நீச்சலடித்துச் செல்ல முடியும் என்று பந்தயம் வைப்போம். நீரோட்டம் உங்களைக் கடுமையாக இழுக்கும். அந்த நூறு மீட்டரை வேகமாகக் கடக்க வேண்டும். நாங்கள் கடந்தோம்.
கேமராக்கள் குறித்தும் நாங்கள் நிறைய பேசியுள்ளோம். அவருக்கு எல்லாவற்றைப் பற்றியும் தெரியும். அப்போது தமிழகத்தில் ஒரே மாதிரியான திரையிடல் முறை இல்லாததால், ஒரு ஒளிப்பதிவாளரின் ப்ரேமிங் எந்த நேரத்திலும் மோசமாகிவிடும் வாய்ப்புண்டு. என்ன ப்ரேமை படத்தில் வைக்கிறோமோ அது தியேட்டரில் இருக்காது. ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு விதமான திரையிடல் இருந்தது.
உலகளாவிய அளவிலான தரநிலை அப் போது இல்லை. ஒரு அங்குல அளவுள்ள பொருள், திரையில் பெரிதாகத் தெரியும். நெருக்கமான ப்ரேமில், உதடுகளும், மூக்கின் முனையும் வைக்கப்பட்டிருந்தால், கிராமத்துத் திரையரங்கில் நம்மால் உதடுகளைப் பார்க்க முடியாது. அல்லது பாதி உதடுகள் தெரியும்.
பாலுமகேந்திரா அந்தத் திரையிடல் குறைபாடுகளைச் சின்ன ஒரு உத்தியைப் பயன்படுத்திச் சரிசெய்தார். அதை யாரும் செய்வதற்குத் துணியவில்லை. கேமராவின் செவ்வக ஆடியில் ஒரு தடுப்பை (மாஸ்க்கை) பொருத்தினார். கேமராவுக்கு வெளியே உள்ள உலகை அவர் சரிசெய்யாமல், தனது வேலைப் பரப்பைக் குறைத்துக்கொண்டார். அவர் ஏற்படுத்திக்கொண்ட முறையில் தவறே நிகழாது. நீங்கள் அதீதமாகக் குவித்தாலும், கருப்பு ப்ரேம்தான் வரும். அதை அதிகம் சுருக்கவும் முடியாது.
எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர் அதைச் செய்தார். அதனால்தான் அவர் முன்னோடியாக இருந்தார். நாங்கள் சந்திக்கும்போது, உலகச் சினிமா மேதை கள் அனைவரின் படங்களையும் அவர் பார்த் திருந்தார். முக்கியமான திரைப்பட கர்த்தாக் கள் சிலரையும் நேரில் சந்தித்திருந்தார்.
விதிகளை உடைத்தவர்
பாக்ஸ் ஆபீசுக்கும் நல்ல சினிமாவுக்கும் இடையில் முதல் பாலத்தைக் கட்டியவர் பாலுமகேந்திராதான். அவர் எடுத்த மூன்றாம் பிறை வெள்ளி விழா கண்ட படம். தேசிய விருதும் பெற்றது. விருது வாங்கும் படங்கள் ஓடாது என்ற எழுதப்படாத விதியை அவர் உடைத்தார். ஒரு திரைப்பட இயக்குநராக எனது வளர்ச்சியில் பங்குபெற்றவர் அவர்.
ஒரு திரைக் கலைஞனாக எனது வளர்ச்சியில் பாலுமகேந்திராவின் பங்கு முக்கியமானது. எனது வளர்ச்சியில் கே. பாலச்சந்தரின் பங்கு முற்றிலும் மாறுபட்டது, அது தனிக்கதை. பாலுமகேந்திராவிடம் இருக்கும் பெரிய புகார் என்னவெனில் அவர் நிறைய படங்களைச் செய்திருக்கலாம். குறைந்த பட்சம் கூடுதலாக 20 படங்கள். நிறைய படங்களில் ஒளிப்பதிவாளராகவாவது பணியாற்றியிருக்கலாம்.
மூன்றாம் பிறை கதையை முதலில் அவர் என்னிடம் சொன்னபோது, 20 நிமிடம்தான் கேட்டேன். ஒப்புக்கொண்டேன். கிளைமாக்ஸை மட்டும் சரி செய்ய வேண்டும் என்று கூறினேன். மனம் உடைந்த மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை அதிகபட்சமாக நிகழ்த்து வதற்கு முயற்சித்தோம். மண்ணில் புரண்டு, மழையில் உருளும் அந்தக் காட்சி மறக்க முடியாதது. மூன்றாம் பிறையின் இந்தி வடிவமான சத்மாவின் கிளைமாக்ஸில் மழைக்காகக் காத்திருந்தோம். சரியாக மழையும் பெய்தது. பாலு அதை மந்திரத் தருணம் என்று சொன்னார்.
பாலுவைக் கொண்டாடுவோம்
நாங்கள் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருந் தோம். அவரது மரணத்தால் நான் நிலை குலைந்து போய்விடவில்லை. மரணம் நம் எல்லாருக்கும் வரும் என்று எனக்குத் தெரியும்.
அவர் நிறைய படங்களைச் செய்திருக்கலாம் என்பது மட்டுமே எனது ஒரே குறை. ஆனால், அவரது மாணவர்கள் அதைப் பூர்த்தி செய்துவிட்டார்கள். பாலுமகேந்திராவைப் போன்ற மனிதரை இழப்பதில் உள்ள சோகமான விஷயத்தை, அவருடன் எனக்கு ஏற்பட்ட மகத்தான தருணங்கள் பூர்த்தி செய்யும். அவரது மரணத்துக்காகத் துக்கிப்பதைவிட, அந்தத் தருணங்களைக் கொண்டாட வேண்டும்.
நான் அவரை மரணப் படுக்கையில் பார்த்தி ருந்தாலும், இதைத்தான் சொல்லியிருப்பேன். "கவலைப்படாதீர்கள் பாலு, உங்கள் படைப்புகள் வாழும்."
0 comments:
Post a Comment