நாயகன் மாதவன் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இல்லாத இவர் பாட்டியின் அரவணைப்பில் இருக்கிறார். இவர் மீது பாட்டி மிகுந்த பாசம் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் எந்தவித பொறுப்பும் இல்லாமல் ஊரைச் சுற்றி வருகிறார்.
ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது காஞ்சனாவை சந்திக்கிறார் மாதவன். முதல் சந்திப்பிலேயே இருவரும் மோதிக் கொள்கிறார்கள். திமிராக பேசும் காஞ்சனாவை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதனால் காஞ்சனாவை அடிக்கடி சந்திக்க வழியைத் தேடுகிறார் மாதவன்.
அப்போது இளம் விதவையான மலர்விழி நடத்தும் நடனப்பள்ளியில் காஞ்சனா நடனம் பயின்று வருவது மாதவனுக்கு தெரிகிறது. உடனே அவரும் அந்த நடனப் பள்ளியில் சேருகிறார். அங்கேயும் இருவரும் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
நடனப்பள்ளி நடத்தும் மலர்விழி அடிக்கடி மயக்கம் போட்டு விழுபவர். ஒருநாள் மாதவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு டாக்டர், நீங்கள் இளம் விதவை, உங்களுக்கு கண்டிப்பாக ஒரு ஆண் துணை தேவை. அடுத்த தடவை நீங்கள் மயக்கம் போட்டு விழுந்தால் ஆண் துணையில்லாமல் உங்களை காப்பாற்ற முடியாது என்று ஆலோசனை கூறுகிறார். இதனை வெளியில் இருந்து கேட்டு விடுகிறார் மாதவன்.
இந்நிலையில் ஒருநாள் மாதவன், மலர்விழி வீட்டுக்குச் செல்கிறார். அங்கு மயங்கிய நிலையில் மலர்விழி கிடக்கிறார். எனவே, டாக்டர் சொன்ன ஆலோசனைப்படி மலர்விழியுடன் இணைந்து விடுகிறார் மாதவன். இதனால் மலர்விழி காப்பாற்றப்படுகிறாள். இதன்பிறகு மலர்விழி ஞாபகமாகவே மாதவன் இருக்கிறார்.
இதற்கிடையில் மாதவனுடன் சண்டைப்போட்டு கொண்டிருந்த காஞ்சனா மனம் மாறி மாதவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் மாதவன், மலர்விழியை கரம் பிடித்தாரா? காஞ்சனாவை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
மாதவனாக நடித்திருக்கும் அஸ்வினின் நடிப்பு முதற்பாதியில் ரசிக்க முடியாமல் இருந்தாலும் பிற்பாதியில் ரசிக்கும் படியாக நடித்திருக்கிறார். மலர்விழி என்னும் கதாபாத்திரத்தில் இளம் விதவையாக நடித்திருக்கும் சிஜா ரோஸ், தன் நடிப்பு திறமையால் கதாபாத்திரத்திற்கு மெருகூட்டியிருக்கிறார். இவருடைய நடனம் மிகவும் அருமை. காஞ்சனாவாக நடித்திருக்கும் நீரஜாவுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் ஓரளவுக்கு ரசிக்கலாம்.
வெண்புறா வெங்கடேஷாக வரும் பொன்னம்பலம், காமெடி கலந்த வில்லன் நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார். வசந்த மணி இசையில் பாடல்கள் சுமார்தான். ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இயக்குனர் மாசில், ஏற்கனவே வேறொரு மொழியில் வந்த படத்தை தமிழில் சிறப்பாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் புதுமையான கிளைமாக்ஸ். அதை ரசிக்கும் படியாக எடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘மாதவனும் மலர்விழியும்’ மலராத மொட்டு.

hey this is an interesting...thank for providing this..give more cinema news..this is a nice site
ReplyDeleteLechuza planters
நன்றி தோழி...
Delete