உலக நாயகன் கமல்ஹாசன் இன்று படப்பிடிப்புத் தொடங்கியுள்ள உத்தமவில்லன் திரைப்படத்திற்குப் பிறகு மலையாளப்படமான திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஜூன் மாதம் துவங்கவுள்ளன.
இதன் தமிழ் ரீமேக்கினை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோஷப் இயக்கவுள்ளார் என்பதும், கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என்பது மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகளாகும். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் போன்ற விபரங்களை இன்னும் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. அதற்குள்ளாக கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்துள்ளன.
முதலில் இப்படத்தின் ஹீரோயினைப் பற்றிய வதந்திகள் பரவின. இப்படத்தின் ஹீரோயினாக நதியா அல்லது சிம்ரன் நடிக்கலாம் என்று கூறப்பட்டு, சமீபமாக சிம்ரன் நடிப்பது ஓரளவு உறுதியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்ததாக இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்ற கிசுகிசுக்கள் பரவின. அதனோடு தற்பொழுது பிரபல எழுத்தாளரும், இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய கடல் படத்திற்கு வசனம் எழுதியவருமான ஜெயமோகன் இப்படத்திற்கு வசனம் எழுதவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இப்படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் மற்றும் வசனகர்த்தா ஆகியோரைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து பரவிவருவதால் படக்குழு விரைவில் இதனை உறுதிப்படுத்தினால் ரசிகர்களின் குழப்பம் தீரும்.

0 comments:
Post a Comment