அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு.
இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது.
குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது.
நல்ல புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மாகுலர் டிஜெனெரேசன் (macular degeneration) எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துதலிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன.
கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மையும் உண்டு. சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் இதன் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கின்றன. இதனால் அம்மை நோயினால் ஏற்படும் வலி குறையும்.
கொத்தமல்லியில் மணம் நிறைந்த நறுமண எண்ணெய் இருப்பதால், பசியுண்டாக்கியாகச் செயல்பட்டு, வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் நொதிகளையும், சுரப்புக்களையும் அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. மேலும் பசியின்மையைப் போக்குவதிலும் பயன்படுகிறது.
0 comments:
Post a Comment