Saturday 15 March 2014

Leave a Comment

குலம் தழைக்க அருள்புரியும் சப்த கன்னியர் கோவில் - ஒரு சிறப்பு பார்வை..!



ஸ்தல வரலாறு:

நம் தமிழ் நாட்டுக் கிராமங்களில் விநாயகர் கோவிலும், மாரியம்மன் கோவிலும் நீக்கமற நிறைந்திருப்பது கண்கூடான நிஜம். திருச்சி திருவானைக்காவலை அடுத்த கீழகொண்டையான் பேட்டை (தலைகிராமம்) கீழ் விபூதி பிரகாரத்தில் அன்னை அருள்மிகு  மகா மாரியம்மன் என்ற திரு நாமத்தில் அருள்பாலிக்கிறாள்.

திருவானைக்காவல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்  கிழக்கே இந்த ஆலயம் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் முகப்பைத் தாண்டி மகா மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அன்னை மகாமாரியம்மன் மூலவராய் அருள்பாலிக்கிறாள்.

கருவறையில் அன்னை நான்கு கரங்களுடன் சாந்த சொரூபியாய் அருள் பொழியும் இன்முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அழகே அழகு. அன்னையின் மேல் இரு கரங்களில் உடுக்கையும் வேலும் இருக்க, கீழ் இரு கரங்களில் குங்குமக் கிண்ணமும், கத்தியும் காட்சி  தருகின்றன. அன்னை பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.

ஆலயத் திருச்சுற்றில் தென் மேற்கில் தலவிருட்சமான வேம்பு தழைத் தோங்கி நிற்கிறது. தல விருட்சத்தின் அடியில் ராகு தன்  துனைவியுடன் நாகர்களும் அருள் பாலிக்கின்றனர். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில், ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் தோஷத்தின் கடுமை குறைவதுடன், பெருமளவில் நிவர்த்தி பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு பெண்களின் கூட்டம் அதிகமாக இருப்பது இயற்கை. திருச்சுற்றின் வடமேற்கு திசையில் சப்த கன்னியார்களின் திருமேனிகள் உள்ளன. ஒரே கல்லில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திருமேனிகளைப் பார்க்கும் போது நாம் வியக்காமல் இருக்க முடியாது.

இந்த சப்த கன்னியார்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் பக்தர்கள். நாடெங்கிலும் உள்ள பல நூறு குடும்பங்களுக்கு இந்த  சப்த கன்னியர்கள் குலதெய்வமாய் விளங்குகின்றனர். தங்களது குலதெய்வத்தை தரிசிக்க வரும் குடும்பத்தினர் சப்த கன்னியருக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து,  மலர்மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

சப்த கன்னியருக்கு பிடித்தமானது விரலி மஞ்சள். எனவே, வரும் பக்தர்கள் விரலி மஞ்சளை அரைத்து எடுத்து வருகின்றனர்.  பின்னர், அந்த அரைத்த மஞ்சளை சப்த கன்னியருக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த சப்த கன்னியர்கள் சன்னதியின் மேல்புறம் மூடப்படாமல் திறந்தே உள்ளது. மழையோ, வெய்யிலோ இவர்கள் மேல்படுவதை தவிர்க்க இலயாது.

திருச்சியில் உள்ள அன்னை வெக்காளி அம்மனைப் போலவே இங்கு இந்த சப்த கன்னியர்கள் கூரையின்றி மேலே திறந்த  நிலையில் அருள்பாலிப்பது போல் வேறெங்கும் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சப்தமி திதியில் சப்த கன்னியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

அன்று பக்தர்கள் நிறைய அளவில் வந்து  சப்த கன்னியரை தரிசித்து பயன்பெறுகின்றனர். மூலவரான அன்னை மகா மாரியம்மனின் காவல் தெய்வமான சங்கிலி ஆண்டவர் ஆலயத்தின் அருகேயே உள்ளார். அன்னை மகா மாரியம்மனுக்கு தினசரி இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.

ஆலயம் காலை 6 மணி முதல் 9 மணி வரையி லும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அன்னைக்கு ஆண்டுதோறும் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை திருவிழா நாளாகும். அதற்கு முந்தின புதன்கிழமை முகூர்த்த கால் நட்டு காப்பு  கட்டுவார்கள்.

அன்று நல்ல நாள், நல்ல நேரம் என்று எதையும் பார்ப்பதில்லை. சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பான பிறையில் ஆலயத்தில் யாகம் நடைபெறும். ஞாயிறு காலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சுமார் 200 காவடிகள் ஆலயத்திலிருந்து புறப்படும், சங்கிலி ஆண்டவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, அவரிடம் உள்ள  வேல் மற்றும் அரிவாளை எடுத்துக்கொண்டு கொள்ளிடம் நதியை நோக்கிச் செல்வர். அங்கும் பலர் காத்திருப்பார்கள்.

பால் காவடி, அலகு காவடி, தீர்த்த காவடி, கட்டை காவடி, அக்னி சட்டி இவைகளுடன் சுமார்  300 பேர் கொள்ளிடத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் அன்னையின் ஆலயம் வந்து சேருவார்கள். அவர்கள் கொண்டு வரும் பாலால் அன்னைக்கு குளிரக் குளிர அபிஷேகம் செய்வார்கள்.

பின்னர் காவடி எடுத்த பக்தர்களுக்கும், கூடி நிற்கும் பக்தர்களுக்கும் அன்னதானமாக கேழ்வரகு கூழ் தருவார்கள். அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுமார் 150 பெண்கள் பங்குபெறும் இந்த பூந்தேர் முழுவதும் பூக்களாலேயே  அலங்கரிக்கப்பட்டிருக்கும், இத்தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து ஆலயம் சேர மறுநாள் காலை 9 மணி ஆகிவிடும்.

பின்னர் அன்னைக்கு பல திரவியங்களாலும், பழங்களாலும் அபிஷேகம் நடைபெறும். மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை விடையாற்றியுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். பின்னர், அன்று மதியம் நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் பங்குபெற்று பயன் பெறுவர்.

புளிசாதம், தயிர் சாதம், கற்கண்டு பொங்கலுடன் அன்னதானம் அமர்க்களமாக நடைபெறும். வேண்டியதை அருளும் அன்னை மகாமாரியம்மனையும், குலம் தழைக்க அருள்புரியும் சப்த கன்னியரையும் தரிசிக்க ஒருமுறை  இந்த ஆலயம் வந்து போகலாமே!

0 comments:

Post a Comment