அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால், "சூப்பர் ஸ்டார்'' ஆனவர் ரஜினிகாந்த். இன்று ஜப்பான் உள்பட பல வெளி நாடுகளில் அவருடைய புகழ்க்கொடி மிக உயரத்தில் பறக்கிறது.
ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ். அதை சினிமாவுக்காக "ரஜினிகாந்த்'' என்று மாற்றி வைத்தவர், டைரக்டர் கே.பாலசந்தர்.
பெற்றோர்
ரஜினிகாந்தின் தந்தை பெயர் ரானோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ராம்பாய்.
"கெய்க்வாட்'' என்பது, குடும்பப் பெயராகும். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் பரம்பரையில் வந்தவர்கள் "கெய்க்வாட்'' என்று அழைக்கப்பட்டனர்.
ரஜினியின் முன்னோர்கள் சிவாஜியின் மெய்க்காப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களில் சிலர் பிற்காலத்தில் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்தனர். மற்றும் சிலர், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
ரஜினியின் தந்தையான ரானோஜிராவ் பிறந்தது நாச்சிக்குப்பத்தில்தான்.
ரஜினியின் தாயார் ராம்பாய், கோவை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கொள்ளேகால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர்.
ரானோஜிராவுக்கு கர்நாடக மாநில போலீஸ் இலாகாவில், போலீஸ் உத்தியோகம் கிடைத்ததால், குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார்.
ரானோஜிராவ், தெய்வ பக்தி மிக்கவர். நேர்மையானவர். வேலையில் திறமையானவர். அதனால் படிப்படியாக உயர்ந்து "ஹெட் கான்ஸ்டபிள்'' ஆனார்.
ரஜினி பிறந்தார்
ரானோஜிராவ் - ராம்பாய் தம்பதிகளுக்கு சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு மூன்றாவதாகப் பிறந்தவர் ரஜினிகாந்த்.
1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி இரவு 11-45 மணிக்கு அவர் பிறந்தார். திருவோணம் நட்சத்திரம்; மகர ராசி.
ரஜினிக்கு சத்தியநாராயணராவ் 5 வயதும், நாகேஸ்வரராவ் மூன்று வயதும் மூத்தவர்கள். ரஜினிக்கு ஒரு அக்காள். பெயர் அஸ்வத் பாலுபாய்.
ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும், தாய் மொழி மராத்தி.
பள்ளிப்பருவம்
குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கினார்.
ஐந்தாவது வயதில், பசவன்குடியில் உள்ள பிரிமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கினார்.
ரஜினிகாந்த் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது, தாயாரை இழந்தார்.
உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்திரியில் இருந்த தாயாரைப் பார்க்க, ரஜினியை அவர் அண்ணன் சத்தியநாராயணா அழைத்துச் சென்றார். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ராம்பாய், ரஜினியை தன் அருகே அழைத்து தலையைக் கோதி விட்டார். கையை எடுத்து முத்தமிட்டார்.
அதுதான் மகனுக்கு அவர் கொடுத்த கடைசி முத்தம். மறுநாள் இறந்து விட்டார்.
விவரம் அறியாத சிறு வயதிலேயே அன்னையை இழந்தார் ரஜினி. தாயார் இறந்து விட்டார், இனி அவரைப் பார்க்க முடியாது என்பதைக்கூட அப்போது அவரால் உணர முடியவில்லை.
இதுபற்றி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-
"சின்ன வயதில் அவன் (ரஜினி) ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருந்தான். அம்மா இறந்தபோது, அவனுக்கு வயது 9. விவரம் தெரியாத வயது.
அம்மா உடலை, மாலை போட்டு வைத்திருந்தோம். அப்போதுகூட, அம்மா இறந்ததை உணராமல், வீதியில் சைக்கிள் விட்டுக்கொண்டிருந்தான். அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்கு நினைப்பு.
மறுநாள், வீட்டில் அம்மா இல்லை என்று தெரிந்ததும், "அம்மா எங்கே? அம்மாவைப் பார்க்கணும்'' என்று அழுதான்.
அன்று முதல் அவனுக்கு அம்மா என் மனைவிதான்.
அண்ணியிடம் ரொம்பவும் பாசமாக இருப்பான். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வான்.
நான் வீட்டுக்கு வந்ததும், அவன் இருக்கிறானா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவனைப் பார்க்காமல் ஒருநாள்கூட தூங்கியது கிடையாது.
தினமும் அவன் நண்பர்களுடன் சுற்றிவிட்டு, லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவான். அது எனக்குப் பிடிக்காது. சத்தம் போடுவேன். சில சமயம் அடித்தும் இருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் அவன் பெரிதாக நினைக்கமாட்டான். உடனே சமாதானமாகி, என் பக்கத்தில் வந்து உட்காருவான். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.''
இவ்வாறு சத்தியநாராயணா குறிப்பிட்டுள்ளார்.
தாயார் பற்றி பிறகு ரஜினிகாந்த் கூறுகையில், "அம்மா இறந்தபோது நான் விவரம் அறியாச் சிறுவனாக இருந்தேன். இப்போது, எந்தத் தாயைப் பார்த்தாலும், எங்கம்மாவை நினைத்து ஏங்குகிறேன். `அன்னை ஓர் ஆலயம்' படத்தில் நான் நடித்தபோது, "அம்மா, நீ சுமந்த பிள்ளை'' என்ற பாடல் காட்சியில் நான் நிஜமாகவே என் அம்மாவை நினைத்து அழுதுவிட்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment